×

கடைமடை கடைசி எல்லையில் காவிரி நீருக்கு சூடம் ஏற்றி வரவேற்பு

பட்டுக்கோட்டை, ஜூன் 25: மேட்டூரில் இருந்து கல்லணை வந்து அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் கடைமடைப்பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், திருவோணம், பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும். கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் அறந்தாங்கி தாலுக்கா நாகுடி அருகே உள்ள மும்பாலை ஏரியில் போய் முடியும். இந்தாண்டு காலத்தே முறையாக தூர்வாரப்பட்டு, வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டதன் காரணமாக வரலாற்றிலேயே முதன்முறையாக கடைமடையின் கடைசி எல்லையான பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்திற்கு நேற்று காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது. பொதுவாகவே இந்த கடைசி எல்லைக்கு தண்ணீர் வந்து சேருவதற்கு 25 நாட்கள் முதல் 30 நாட்கள் ஆகும்.

இந்நிலையில், மேட்டூரில் தண்ணீர் திறந்து 12 நாட்களுக்குள் கடைசி எல்லைக்கு தண்ணீர் வந்ததை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சூரப்பள்ளம் 16ம் நம்பர் வாய்க்காலுக்கு நேற்று வந்த காவிரி தண்ணீரை விவசாயிகள் மற்றும் ஏராளமான பெண்கள் நெல்மணிகள், பூ தூவி, சூடம் ஏற்றி காவிரித்தாயை வணங்குகிறோம் என கையெடுத்து கும்பிட்டு வரவேற்றனர். இது குறித்து சூரப்பள்ளம் விவசாயிகள் வைத்திநாதன், கருணாகரன் கூறுகையில், மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடையின் கடைசி எல்லையான சூரப்பள்ளத்திற்கு 25 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் தான் வந்துசேரும். ஆனால், இந்தாண்டு சூரப்பள்ளம் 16ம் நம்பர் வாய்க்காலுக்கு 12 நாட்களுக்குள் தண்ணீர் வந்து சேர்ந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதற்கு காரணம் முறையாக தூர்வாரப்பட்டு, வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

The post கடைமடை கடைசி எல்லையில் காவிரி நீருக்கு சூடம் ஏற்றி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Pattukottai ,Mettur ,Kallanai ,
× RELATED கர்நாடக மாநிலத்தின் கருத்தை...