×

சத்தியமங்கலம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்; 2 ஆயிரம் பேர் பயன்

 

சத்தியமங்கலம், ஜூன் 25: சத்தியமங்கலம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாமை கோபி ஆர்டிஓ திவ்ய பிரியதர்ஷினி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கேசிபி இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் வருமுன் காப்போம் திட்ட இலவச பொது மருத்துவ முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் உக்கரம் வட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமிற்கு கோபி ஆர்டிஓ திவ்ய பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசிபி இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் பொதுநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், மகப்பேறு நல மருத்துவர், பல் மருத்துவர், சித்த மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், எலும்பு சிகிச்சை மருத்துவர், தோல் மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர், மனநல மருத்துவர், பெண்நல மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். இதில் ஸ்கேன், செமி ஆட்டோ அனலைசர் மூலம் ரத்த பரிசோதனை, சர்க்கரை, கொழுப்பு, மலேரியா பரிசோதனை, கர்ப்பப்பை வாய்ப்புற்று பரிசோதனை, அல்ட்ரா சோனா கிராம், கண்புரை ஆய்வு, சிறுநீர் பரிசோதனை, இனப்பெருக்க மண்டல நோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

முகாமில் மொத்தம் 2053 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 92 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். 121 நபர்களுக்கு எக்கோ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை உக்கரம் வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் செய்தனர். முகாமில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் தங்கசித்ரா, சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் கணேஷ், நகராட்சி பொறியாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், அப்துல் வஹாப், உக்கரம் மருத்துவ அலுவலர் மைக்கேல், மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து 2 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில், பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் முகாமை ஏற்பாடு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கும், நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கேசிபி இளங்கோ உள்ளிட்டோருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post சத்தியமங்கலம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்; 2 ஆயிரம் பேர் பயன் appeared first on Dinakaran.

Tags : Varumun ,Kappom Project Camp ,Sathyamangalam Municipal High School ,Sathyamangalam ,Gopi RTO ,Divya Priyadarshini ,Sathyamangalam Municipal High School… ,Kappom ,Project ,Camp ,Dinakaran ,
× RELATED ‘வருமுன் காப்போம்’ திட்டத்தில் 3 ஆண்டில் 1.84 லட்சம் பேர் பயன்