×

பெண்கள் பாதுகாப்பு திட்டம்; துவங்கிய 3 நாளில் 60 அழைப்பு: ஈரோட்டில் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

ஈரோடு : ஈரோடுக்கு வந்த டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அளித்த பேட்டி: இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக ‘பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091 112 044-23452365 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்து செல்லும்.

அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல்துறைக்கு வந்துள்ளது. குறைவான தூரமாக இருக்கும் பட்சத்தில் காவல்துறை ரோந்து வாகனத்தில் அழைத்து சென்று விடப்படும். தூரம் அதிகமாக இருந்தால் ஆட்டோ அல்லது டாக்ஸிகளில் அனுப்பி வைக்கப்படும். மேலும் பாதுகாப்புக்காக போலீஸ்காரர் ஒருவர் உடன் செல்வார். இவ்வாறு அவர் கூறினார். முதன்முதலில் பணியில் சேர்ந்த கோபி காவல் நிலையத்தில் ஆய்வு: முதன் முதலாக பணியில் சேர்ந்த கோபி காவல்நிலையத்துக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: 1989ல் கோபி காவல் நிலையத்தில் தான் எனது முதல் பணி ஆரம்பித்தது. அன்றைய காலகட்டத்தில் வீரப்பன் தான் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தான். வீரப்பனுடன் 4 முறை துப்பாக்கி சண்டை நடத்தி உள்ளேன். பணி நிறைவு பெறக்கூடிய சூழ்நிலையில் அதிகாரிகளுக்கு நான் கூறுவது பணியில் சேரும்போது உள்ள நேர்மையுடன் ஓய்வு பெற்றால் அதுவே மிகப்பெரிய சாதனை என்றார்.

The post பெண்கள் பாதுகாப்பு திட்டம்; துவங்கிய 3 நாளில் 60 அழைப்பு: ஈரோட்டில் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : DGB Sylendrababu ,Erot ,Erode ,DGB ,Sailendra Babu ,Erote ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...