×

ராணுவம் – கூலிப்படை இடையே திடீர் மோதல் ரஷ்யாவில் உள்நாட்டு போர் அபாயம்: நாட்டை பாதுகாப்பேன் என அதிபர் புடின் சபதம்

மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்ட வாக்னர் ராணுவ கூலிப்படை திடீரென ரஷ்ய அரசுக்கு எதிராக திரும்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய எல்லை நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த கூலிப்படை, தலைநகர் மாஸ்கோ நோக்கி கவச வாகனங்களுடன் அணிவகுத்து வருவதால் உள்நாட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் கடந்த ஒன்றரை ஆண்டாக நீடிக்கிறது. இந்த போரில் தங்களுக்கு உதவுவதற்காக எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான வாக்னர் எனும் ராணுவ கூலிப்படையை ரஷ்ய ராணுவம் ஒப்பந்தம் செய்தது.

இந்த கூலிப்படை சிரியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஒப்பந்த அடிப்படையில் போரில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் போரில் பெரும்பாலும் ஆக்ரோஷமாக ஈடுபட்டது வாக்னர் கூலிப்படையினர்தான். சமீபத்தில் பக்முத் நகரில் நீண்ட சண்டையிட்டு, அந்நகரை கைப்பற்ற காரணமாக இருந்ததும் வாக்னர் கூலிப்படைதான். இந்நிலையில், வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜினுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கான உண்மையான நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றாலும், ரஷ்ய ராணுவ உயர் தலைவர்களுடன் பிரிகோஜினுக்கு மோதல் போக்கு நிலவி வந்ததாகவும், அது தற்போது தீவிரமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், பிரிகோஜின் தனது படையுடன் உக்ரைன் எல்லையை கடந்து, ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஆன் டோன் நகரை நேற்று தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,100 கிமீ தொலைவில் ரோஸ்டோவ் அமைந்துள்ளது. இந்நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை வாக்னர் கூலிப்படையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிரிகோஜின், ராணுவ தலைைமயகம் மட்டுமின்றி விமான தளம் மற்றும் பிற ராணுவ இடங்கள் அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்நகரின் பிரதான சாலைகளில் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டு, படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் குண்டு வீச்சு நடந்ததாகவும், மக்கள் பதற்றத்துடன் ஓடுவது போன்ற வீடியோக்களும் வெளியாகி உள்ளன. இதுமட்டுமின்றி வாக்னர் கூலிப்படை தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறி வருகிறது. அதன் கவச வாகனங்கள் லிபெட்ஸ்க் நகரம் வழியாக படையெடுத்து வருகிறது. தங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் அழித்து விடுவோம் என வாக்னர் கூலிப்படை எச்சரித்துள்ளது. அதே சமயம் கூலிப்படையினருக்கு பதிலடி தருவதற்காக மாஸ்கோ நகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அரசு முக்கிய கட்டிடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

படைகள் வருவதை தடுக்க பாலங்கள் உடைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் இயந்திர துப்பாக்கியுடன் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வாக்னர் படை நுழைய முயன்றால் உடனடி தாக்குதல் நடத்த ரஷ்ய ராணுவம் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் நாட்டை பாதுகாப்பேன் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சபதம் செய்துள்ளார். இதனால், ரஷ்யாவில் உள்நாட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் உலக நாடுகளை பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல தடைகளை விதித்துள்ள நிலையில், இந்த விவகாரம் புதிய திடுக்கிடும் திருப்பமாக அமைந்துள்ளது. ரஷ்யாவின் ராணுவ சேவைகள், வாக்னர் தலைவர் பிரிகோஜினை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளன.

* முதுகில் குத்திய துரோகிகள்
வாக்னர் கூலிப்படைக்கு கண்டனம் தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில், ‘‘இது ஒரு துரோகச் செயல். தேச விரோதிகள் எங்கள் முதுகில் குத்திவிட்டனர். கிளர்ச்சியை உருவாக்கிய அனைவரும் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள். ராணுவத்திற்கும், பிற அரசு அமைப்புகளுக்கும் தேவையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் முழு ராணுவமும், பொருளாதார மற்றும் தகவல் இயந்திரமும் எங்களுக்கு எதிராக செயல்படுகிறது’’ என்றார்.

* உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்
ரஷ்யாவில் நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. வெள்ளை மாளிகையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஆடம் ஹாட்ஜ் கூறுகையில், ‘‘ரஷ்யாவில் நடக்கும் நிலைமைகளை அமெரிக்கா கண்காணித்து வருகிறது. முன்னேற்றங்கள் குறித்து நட்பு மற்றும் கூட்டு நாடுகளுடன் ஆலோசனை நடத்தப்படும்’’ என்றார்.

* மக்கள் அவசர வெளியேற்றம்
தலைநகர் மாஸ்கோவில் முக்கிய பொது இடங்களில் மக்கள் நேற்று அப்புறப்படுத்தப்பட்டனர். வாக்னர் கிளர்ச்சிப்படை லிபெட்ஸ்க் நகரில் நுழைந்துள்ள நிலையில், முக்கிய மால்கள், கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

* வாக்னர் படையினரை கண்டதும் சுட அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
* நாட்டில் ராணுவ சட்டத்தை மீறினால் 30 நாட்கள் சிறையில் அடைக்க அனுமதிக்கப்படும் சட்டத்தில் புடின் நேற்று கையெழுத்திட்டார்.
* மாஸ்கோவை அடையும் எம்4 நெடுஞ்சாலையில் பல இடங்களில் தடுப்புகளை வைத்தும், சாலையின் குறுக்காக பள்ளங்கள் தோண்டியும் வாக்னர் படையின் முன்னேற்றத்தை தடுக்க ரஷ்யா முயற்சிகள் எடுத்தது.
* மாஸ்கோவில் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்களில் பயணம் செய்யும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* செயின்ட்பீட்டர்ஸ்பெர்க் நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தன்வினை தன்னை சுடும்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்துள்ள செய்தியில், ‘நீண்ட காலமாக, ரஷ்யா தனது பலவீனத்தையும் முட்டாள்தனத்தையும் மறைக்க பொய் பிரசாரம் மேற்கொண்டது. இப்போது எந்தப் பொய்யும் மறைக்க முடியாத அளவுக்கு குழப்பம் நிலவுகிறது. ரஷ்யாவின் பலவீனம் வெளிப்படையானது. ரஷ்யா தனது துருப்புக்களையும் கூலிப்படைகளையும் எவ்வளவு காலம் நம் நிலத்தில் வைத்திருக்கிறதோ, அவ்வளவு குழப்பம், வலி மற்றும் பிரச்சனைகள் பிற்காலத்தில் தனக்குத்தானே ஏற்படும்’ என்றார்.

* ரெய்டில் சிக்கிய ரூ.400 கோடி பணம்
ரோஸ்டோவ்-ஆன்-டோன் நகரை வாக்னர் படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அப்படைப் பிரிவின் தலைமையகத்தில் ரஷ்ய ராணுவம் சோதனையிட்டது. இதில், சுமார் ரூ.400 கோடி ரொக்கம் கைப்பற்றப்பதாக கூறப்படுகிறது. இது பிரிகோஜின் தனது வீரர்களுக்கான சம்பளம் மற்றும் பிற செலவுகளுக்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

* இது ராணுவ சதி அல்ல நீதிக்கான அணிவகுப்பு
டெலிகிராம் வீடியோ செய்தியில், வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஜின்: ‘‘அதிபர் புடின் எங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளார். நாங்கள் தேச துரோகிகள் அல்ல, தேச பக்தர்கள். நாடு ஊழல், வஞ்சகம் மற்றும் அதிகாரத்துவத்தில் வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை. எனவே இது ராணுவ சதி அல்ல. நீதிக்கான அணிவகுப்பு. நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். இறுதி வரை செல்வோம்’’ என கூறி உள்ளார்.

* 25,000 வீரர்கள் சாகத் தயார்
வாக்னர் கூலிப்படையால், ரோட்டோவ் நகருக்குள் எப்படி நுழைய முடிந்தது, எத்தனை படை வீரர்கள் இருக்கிறார்கள் என்கிற தகவல் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தன்னிடம் 25,000 படை வீரர்கள் இருப்பதாக பிரிகோஜின் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நாட்டிற்காக சாகவும் தயாராக மாஸ்கோ நோக்கி முன்னேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

* எங்கே சென்றார் புடின்
இந்த களேபரத்திற்கு மத்தியில் நேற்று அதிபர் புடினின் விமானம் மாஸ்கோ வினுகோவோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வடமேற்கு திசையில் சென்றது. ரேடார் கண்காணிப்பு தகவல்கள் அடிப்படையில் அந்த விமானம் மாஸ்கோவிலிருந்து 180 கிமீ தொலைவில் உள்ள ட்வெர் பகுதியை அடைந்ததாக கூறப்படுகிறது. இங்கு தான் புடினின் வீடு உள்ளது. எனவே புடின் அங்கு மறைந்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே சமயம் புடின் தலைநகர் மாஸ்கோவில் தான் இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

* எண்ணெய் கிடங்கு மீது குண்டுவீச்சு
மாஸ்கோவிற்கு தெற்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள வோரோனேஜ் நகரில் உள்ள ராணுவ தளங்களையும் வாக்னர் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. அங்கு வாக்னர் படையை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் மிகப்பெரிய எண்ணெய் கிடங்கு வெடித்து சிதறியது. வாக்னர் படையின் அணிவகுப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய போர் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக பிரிகோஜின் கூறி உள்ளார். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன. லிபெட்ஸ்க் நகரில் இருந்து எம்4 நெடுஞ்சாலை வழியாக மாஸ்கோ நோக்கி வாக்னர் படையினர் முன்னேறி வருவதால் அந்த சாலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

* உக்ரைனுக்கு சாதகம்
லண்டனை சேர்ந்த சர்வதேச ராணுவ நிபுணர்கள் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் உக்ரைன் போரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். ராணுவத்திற்கும் வாக்னர் படைக்கும் இடையிலான உட்பூசல் ரஷ்ய படைகளிடையே குழப்பத்தையும் பிளவையும் உருவாக்கும் சாத்தியம் உள்ளது. இதனால் தெளிவான ராணுவ அறிவுறுத்தல்கள் இல்லாமல், யாருக்கு கீழ்ப்படிவது, பின்பற்றுவது என்பது பற்றிய சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உக்ரைன் படைக்கு சாதமாக அமையும்’’ என்கின்றனர்.

* கிரிமினல்களின் கூடாரம்
டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய ராணுவ அதிகாரியும், அதிபர் புடினின் சமையல் நிபுணரான பிரிகோஜினும் இணைந்து கடந்த 2014ல் உருவாக்கியதுதான் வாக்னர் என்கிற தனியார் ராணுவ ஒப்பந்த கூலிப்படை. இந்த கூலிப்படையை வளர்த்து விட்டதே ரஷ்யாதான். இதில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், சிறை சென்று திரும்பியவர்கள் என யார் வேண்டுமானாலும் சேரலாம் சில குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகவே வாக்னர் குழுவில் சேர்வதுண்டு. எந்த சட்ட திட்டங்களும் இன்றி, போர் நியாய, அநியாயங்கள் இன்றி மூர்க்கத்தனமாக வெறித்தனமாக சண்டையிடுவதே வாக்னர் படையின் ஸ்டைல்

* மோதலுக்கான பின்னணி என்ன?
உக்ரைன் போரில் உதவிய வாக்னர் படையை ரஷ்ய ராணுவம் அழிக்க நினைத்ததுதான் இந்த மோதலுக்கான பின்னணியாக கருதப்படுகிறது. போரின் போது தங்களுக்கு போதிய ஆயுதங்கள் வழங்க ரஷ்யா தாமதித்ததாகவும், அதன் மூலம் பல வீரர்கள் உயிரிழக்க காரணமாக இருந்ததாகவும் பிரிகோஜின் குற்றம்சாட்டி உள்ளார். மேலும், வாக்னர் படையில் சேர்வோர் ரஷ்ய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதற்கு பிரிகோஜின் மறுத்துள்ளார். இதுதொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறிய நிலையில் அவர் படைகளை திரட்டி மாஸ்கோவுக்கு புறப்பட்டுள்ளார். உக்ரைன் போரின் போது தங்கள் படைகள் மீதே ரஷ்ய போர் விமானங்கள் குண்டு போட்டு 2000 வீரர்களை கொன்றதாக பிரிகோஜின் குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு காரணமான ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை தண்டிப்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறி உள்ளார்.

The post ராணுவம் – கூலிப்படை இடையே திடீர் மோதல் ரஷ்யாவில் உள்நாட்டு போர் அபாயம்: நாட்டை பாதுகாப்பேன் என அதிபர் புடின் சபதம் appeared first on Dinakaran.

Tags : Russia ,President Putin ,Moscow ,Wagner ,Ukraine ,Russian government ,Dinakaran ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...