×

குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு ரூ.75.95 கோடி நிதி: அரசாணை வெளியீடு

சென்னை: நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடியை அதிகரிக்கப்பதற்காக குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.75.95 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணை: காவிரி டெல்டா மாவட்ட பகுதி உழவர்களின் நலனுக்காக கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடப்பு ஆண்டிலும் அதிக பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ரூ.75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார்.

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் 2023ன் கீழ், ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் என்ற விகிதத்தில் 25 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், 124 லட்சம் ஏக்கருக்கு தேவையான நெல் விதைகள் 50 சதவிகித மானியத்திலும், மாற்றுப்பயிர் சாகுபடிக்காக 15,818 ஏக்கருக்கு மாற்றுப்பயிர் சாகுபடி தொகுப்பும், 6,250 ஏக்கரில் பசுந்தாள் உர விதைகளும், 747 பவர் டில்லர்களும், 15 பவர் வீடர்களும் மானியத்தில் விநியோகம் செய்வதற்காக மொத்தம் ரூ.75.95 கோடி மதிப்பீட்டில் குறுவைச் சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து இத்திட்டதை செயல்படுத்த விரிவான கருத்துருவை வேளாண்மை ஆணையர் அரசுக்கு சமர்ப்பித்தார். அதில், குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் குறிக்கோள்கள், திட்டம் செயல்படுத்தப்பட உள்ள மாவட்டங்களின் விவரம், நெல் சாகுபடியை ஊக்குவிக்க உரங்கள், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து, அதன் உற்பத்தித் திறனை மேம்படுத்த, 250 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு, 30,000 டன் உரங்கள், ரூ.61.60 கோடி மதிப்பில் 100 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படும்.

மேலும், நெல் சாகுபடியில், அதிக விளைச்சலை உறுதிசெய்யும் நோக்கத்தில், தரமான குறுகியகால நெல்விதைகளை. விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின்கீழ், 478 டன்னும், விதை மற்றும் நடவுப் பொருட்களுக்கான துணை இயக்கம் விதை கிராமத்திட்டத்தின்கீழ், 2,000 டன்னும் ஆக மொத்தம் 2,478 டன் சான்று நெல் விதைகள், 50 சதவிகித மானியத்தில், 1.23 லட்சம் ஏக்கருக்கு விநியோகிக்கப்படும். மேலும் 2023ம் ஆண்டில், குறுவை பருவத்தில், நெல் சாகுபடி பரப்பு. உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். பல்வகைப்பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்வதை ஊக்குவித்தல், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கும்.

இந்த குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் மூலம், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள் உள்ளிட்டவை அதில் இடம் பெற்றது. இந்த கருத்துருவினை அரசு பரிசீலனை செய்து, 2023ம் ஆண்டின் குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தினை ரூ.75.95 கோடி க்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது. மேலும், 2023ம் ஆண்டுக்கான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்திற்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திலிருந்து ரூ.35.36 கோடி நிதி ஒப்பளிப்பும், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஏற்கனவே அனுமதித்த நிதியிலிருந்து ரூ.29.24 கோடி பயன்படுத்த அனுமதியும், 2023-24ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதி ஒப்பளிப்பிலிருந்து ரூ.11.34 கோடி நிதியை ஒருங்கிணைப்பு நிதியாகவும் ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

The post குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு ரூ.75.95 கோடி நிதி: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kuruvai ,
× RELATED மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை...