×

சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கும் சூழல் இருந்தால்தான் ஒருவர் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்: போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்; டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “பொது ஒழுங்கு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு” ஆகியவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மட்டுமே சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இச்சட்டத்தை விதிவிலக்காக மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தவறாக பயன்படுத்தினால் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 மற்றும் 22ன் கீழ் வழங்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயலாக இது அமைந்துவிடும்.

குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் வைக்க பரிந்துரைக்கப்படும் குற்றங்கள் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள கடுமையான குற்றங்களாக இருக்க வேண்டும். குற்றச்செயல்கள் பொது ஒழுங்கை முற்றிலும் மீறுவதாக இருக்க வேண்டும். இக்குற்றச் செயலால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களோ ஒட்டு மொத்த சமூகமோ பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் இருந்தால் தடுப்பு காவல் சட்டத்தை பிரயோகிக்க வேண்டும். எனவே, குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் உட்படுத்த பரிந்துரைக்கும் முன் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய விரிவான வழிமுறைகள் குறித்து அறிக்கை ஒன்றை டிஜிபி அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்ப வேண்டும். இதனால் கலெக்டர்களின் தடுப்பு காவல் ஆணைகள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படாமல் உறுதி செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஐகோர்ட் தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்குவதும் தடுக்கப்படும்.

The post சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கும் சூழல் இருந்தால்தான் ஒருவர் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்: போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்; டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : DGP ,CHENNAI ,Tamil Nadu ,Chief Criminal ,Asan Mohammad Jinnah ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...