×

ஆனியும் திருமஞ்சனமும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆனி திருமஞ்சனம் – 25-6-2023

சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப் படும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித் திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இந்த இரண்டு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்து நாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா. ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். அன்று பகல் ஒரு மணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர்.

இன்றைய தினத்தில்தான் நடராஜர் சந்நதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க, ஆனித்திருமஞ்சனம் மிக நல்ல நாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.கோயில் என்பது எல்லா கோயிலுக்கும் பொதுப்பெயர் என்றாலும், சிவத்தலங்களில் சிதம்பரம் மட்டுமே கோயில் என்று குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. தில்லைவனம், பெரும்பற்றப் புலியூர், சிதாகாசம், ஞானாகாசம், பொன்னம்பலம், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் போன்ற பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. சிதம்பரம், பழநி, பாபநாசம், குற்றாலம், ஸ்ரீரங்கம்(ன்) போன்ற திருத்தலங்களின் பெயரை குழந்தைகளுக்கு இடும் வழக்கம் உண்டு. அதுபோல சிதம்பரம், பொன்னம்பலம் என்று பெயரிடும் வழக்கமும் நீண்டகாலமாக இருந்துவருகிறது.

இங்கு முதல் நாள் முதல் எட்டாம் திருவிழா வரை உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ் கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் வாகனங்களில் எழுந்தருள்வர். ஒன்பதாம் நாளில் பஞ்சமூர்த்திகள் அனைவரும் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலாவந்த பின்னர், இரவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார். ஆனிஉத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாம சுந்தரியும் ஆனந்த நடனம் செய்தபடியே, ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வர். பெருமாளும், சிவகாமி அம்மனும் மாறிமாறி நடனம் செய்து சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி அனுக்கிரக தரிசனமாகும். அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம் பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.

நடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம். சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித் திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும். அன்று சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும்.

அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் விடையாற்றி உற்சவம் முடிந்தபின் கொடியிறக்கம் கண்டு விழா இனிதே நிறைவுறும். ஆடல் காணீரோ. திருவிளையாடல் காணீரோ: ஆடலரசனான நடராஜப் பெருமான் ஆடிய அற்புதத் தாண்டவங்களில் 108 தாண்டவங்கள் மிகவும் போற்றப்படுகின்றன.

ஒவ்வொரு தாண்டவத்திற்கும் புராண வரலாறு உண்டு. அந்த வகையில் சில திருத்தலங்களில் ஆடிய தாண்டவங்கள் மிகவும் சிறப்பிக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் தாமிர சபையில் இறைவன் ஆடும் தாண்டவம் படைத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இதனை காளிகா தாண்டவம் என்பர்; முனி தாண்டவம் என்றும் சொல்வர். மதுரை திருப்பத்தூரில் ஆடும் தாண்டவம் கவுரி தாண்டவம் மற்றும் சந்தியா தாண்டவமாகும். இது காத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இருண்ட நள்ளிரவில் சிவபெருமான் ஆடும் சங்கார தாண்டவம் அழித்தல் தொழிலைக் காட்டக்கூடியது. மறைத்தல் தொழிலை திருக்குற்றாலத்தில் சித்திர சபையில் இறைவன் ஆடும் தாண்டவம் ஆனந்த தாண்டவம் என்பர். சிதம்பரத்தில் இறைவன் ஆடும் தாண்டவம் ஆனந்த தாண்டவம். இவை ஐந்து தொழில்களைக் காட்டக் கூடியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

சிவாலயங்களில் பஞ்சலோகத் திருமேனியில் காட்சிதரும் நடராஜப் பெருமான், ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் மரகதக் கல் (பச்சைக் கல்) திருவுருவில் எழுந்தருளியுள்ளார். இத்திருமேனிக்கு சந்தனக்கலவை பூசியிருப்பார்கள். நடராஜருக்கு மட்டுமின்றி ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கும் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான பள்ளிகொண்ட ரங்கநாதருக்குத் திருமஞ்சனம் மிகச்சிறப்பாக நடைபெறும்.

இதனை ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றுவர். இத்திருமஞ்சனத்தின் போது பெருமாளின் திருக் கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும். இதை சேவிப்பது மிகவும் விசேஷம். இதனை பெரிய திருமஞ்சனம் என்பர்.  ஸ்ரீரங்கம் கோயிலின் தென்புறத்தில் ஓடும் காவிரி நதியில் வேத மந்திரங்கள் முழங்க நீர் சேகரிப்பார்கள். தங்கக் குடத்தில் நிறைத்த நீரை யானையின் மீதும்; வெள்ளிக்குடங்களில் நிறைத்த நீரை கோயில் பரிசாரகர்கள் தலையில் சுமந்தும் திருமஞ்சனத்திற்கு எடுத்து வருவார்கள். திருமஞ்சனம் நடைபெற்றதும் பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு இடுவார்கள்.

திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை இந்த நாளில் தரிசிக்க முடியாமல் திரையிட்டிருப்பார்கள். திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோயிலில் பெருமாளுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க பிரசாதத்தை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்தபின் பக்தர்களுக்கு அளிப்பார்கள். ஆனித் திருமஞ்சன அபிஷேகத்தின்போது நடராஜப் பெருமானையும், ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதில் ஐயமில்லை!

நடராஜர் அபிஷேகங்கள்

தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது மார்கழி, காலைச் சந்திக்குச் சமமானது மாசி. உச்சிக்காலத்திற்குச் சித்திரை, மாலைக்காலத்திற்குச் சமமானது ஆனி. இரவுக்கு ஆவணி, அர்த்தயாமத்துக்குப் புரட்டாசி, ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் படும்.

தில்லையில் ஐந்து சபைகள்

1. சித்சபை சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை. இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.

2. கனகசபை சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.

3. தேவசபை பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.

4. நிருத்தசபை தேர் அம்பலம், நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.

5. ராஜசபை ஆயிரங்கால் மண்டபம், மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.

பஞ்ச சபைகள்

ரத்தின சபை திருவாலங்காடு
கனகசபை சிதம்பரம்
ரஜிதசபை (வெள்ளி சபை) மதுரை
தாமிரசபை திருநெல்வேலி
சித்திரசபை திருக்குற்றாலம்
பஞ்ச தாண்டவ தலங்கள்
ஆனந்த தாண்டவம் சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம் திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் மதுரை
ஊர்த்துவ தாண்டவம் அவிநாசி
பிரம்ம தாண்டவம் திருமுருகன்பூண்டி
காட்டிடை ஆடும் கடவுள்
திருவாலங்காடு ஆலங்காடு
திருவெண்பாக்கம் இலந்தைக்காடு
திருவெவ்வூர் ஈக்காடு
திருப்பாரூர் மூங்கிற்காடு
திருவிற்கோலம் தர்ப்பைக்காடு
ஆனந்தத் தாண்டவம்.

தொகுப்பு: அனுஷா

The post ஆனியும் திருமஞ்சனமும் appeared first on Dinakaran.

Tags : Ani ,Thanksgiving Kunkumam ,Abhishekha ,Natarajar ,Chrishalayas ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...