×

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுக

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆனி மகம் – மாணிக்கவாசகர் குருபூஜை

நாயனார் என்ற சொல் அடியாரைக் குறிக்கும் சொல் என்று நினைக்கிறோம். ஆனால், அச்சொல் அடியார்களைக் குறிக்கும் முன்பு, சிவபெருமானைத்தான் குறிக்கிறது. இரண்டாவதாகத்தான் அது ஈசனடியார்களைக் குறிக்கிறது. தன்னை வணங்கி, தன் கொள்கைவழி இணங்குவோர்க்கு தன் பெயரையே வழங்குகிறவர் சிவபெருமான் என்பதை இச்சொல்லின் வழி அறியலாம். பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலை எய்தியவர்கள்.

இந்த அறுபத்து மூவருக்கும் ஆண்டவன் ஆலயத்தில் திருமேனி உண்டு. ஆனால், மாணிக்கவாசகர் அறுபத்து மூவர் வரிசையிலும் வரவில்லை, அதனால் ஆண்டவன் ஆலயத்தில் உள்ள அந்த அறுபத்து மூவர் வரிசையிலும் வரவில்லை. ஆனால், அவர் ஆண்டவனாகவே மாறிவிட்டார். திருப்பெருந்துறையில் நடைபெறும் அபிஷேகம், அலங்காரம், திருவீதியுலா, திருத்தேர் பவனி என அனைத்தும் மாணிக்க வாசகருக்குத்தான்.

தான் வாழ்ந்த வாழ்க்கையின் மூலம் நிலைத்து நிற்பவர்கள் அறுபத்து மூவர். ஆனால், வாழ்க்கையுடன் சேர்த்து தன் வாக்கின் மூலமாகவும் நிலைத்து நிற்பவர்தான் மாணிக்கவாசகர். மற்ற அடியார்கள் குறிப்பாக சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் வரலாறும் ஏறக்குறைய முழுமையாகக் கிடைத்துள்ளன. ஆனால் அவர்தம் பனுவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆனால், மாணிக்கவாசகரின் வரலாறு முழுமையாகக் கிடைக்கவில்லை, ஆனால், அவர் அருளிய திருவாசகம் மட்டும் முழுமையாகக் கிடைத்துள்ளது.

அவ்வாறு திருவாசகம் முழுமையாகக் கிடைந்துள்ளது என்பதை அதன் தொடக்கமாக அமைந்துள்ள சிவபுராணத்தை வைத்தே அறிந்துகொள்ளலாம். ‘‘நமச்சிவாய வாழ்க’’ முதல் ‘‘ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க” வரை ஆறு வாழ்க. ‘‘வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க” என்பதில் தொடங்கி ‘‘சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க’’ என்பது வரை ஐந்து வெல்க. ஈசனடி போற்றி முதல் ‘‘ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி’’ வரை எட்டு போற்றி. திருவாசகம் மொத்தம் 658 பாடங்கள் என்பதை, மேற்கண்ட சிவபுராண வரிகளே விளக்கிவிடுகின்றன என்பார் சொல்லோவியர் சொ.சொமீ. சுந்தரம் அவர்கள்.

இந்தத் திருவாசகம் மட்டும் ஏன் முழுமையாகக் கிடைத்துள்ளது எனில் அதை எழுதியது சிவபெருமான் என்பதால். ஊழிக்காலத்தில் உலகெலாம் அழிந்து ஆண்டவன் மட்டும் தனிமையில் இருக்கும்போது தன் தன்மையைப் போக்கிக் கொள்ள ஒருநூல் வேண்டும் என்று கருதி, மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தின் ஒரு பிரதியை எழுதி எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டார்.

சிவபெருமான் என்பதை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய மனோன்
மணியம் பெ.சுந்தரம் பிள்ளையவர்கள்,
‘‘கடையூழி வரும்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்தில்
உடையார் உன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே”

என்கிறார்.

அத்துடன் இந்தத் திருவாசகத்தைத் ‘தேன்’ என்று பெரியோர்கள் போற்றுகிறார்கள். அதை,

‘‘தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.’’

– என்ற பாடலே எடுத்துக்காட்டுகிறது.

இனிப்புப் பொருட்களிலேயே தேன் தனித்துவம் மிக்கது. நீரிழிவுநோய் அதாவது சர்க்கரைநோய் வந்தவர்கள் இனிப்புப் பொருட்களைச் சாப்பிடக்கூடாது. ஆனால், தேன் சாப்பிடலாம். அது அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவையும் ஏற்படுத்தாது. மாறாக, மருந்தாக மாறி சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். கிராமப்புறங்களில் ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்” என்ற பழமொழி உண்டு. இதனை யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என நாம் கருதுகிறோம். இதனுடைய பொருள் வேறு.

அதாவது, ஆனை என்றால் ஆநெய் (ஆ =பசு) பூனை என்றால் பூநெய் (பூவிலிருந்து கிடைக்கும் தேனாகிய நெய்) இளமையில் ஆவாகிய பசுவினது நெய் சாப்பிட ஒரு காலம் வந்தால் முதுமையில் பூநெய்யாகிய தேனைச் சாப்பிட வேண்டிய காலம் வரும். முதுமையில் பூநெய்யாகிய தேனைச்சாப்பிட வேண்டியது கட்டாயமாகும்.

அது உடல்நலத்திற்கு நல்லது.தேன் எப்படி உடல் நலத்திற்குத் தேவையோ அதுபோல், திருவாசகத்தேன் உள்ளத்தின் நலத்திற்கு தேவையானதாகும். இது கற்போர் உள்ளத்தைக் கவரக்கூடியது. கறைக்கக் கூடியது. கண்ணில் நீர்வரச்செய்யக்கூடியது.

இதைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்,

‘‘விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்
வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேன்
திருவா சகமிங் கொருகால் ஓதின்

கருங்கல் மனமும் கரைந்துருகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே”
– என்று பாடுகிறார்.

அதாவது சிவபெருமான் வாயிலிருந்து தோன்றிய வேதங்களைச் சொல்லும்போது கண்ணீர் விட்டோர் யாருமில்லை. ஆனால், மாணிக்க வாசகரின் திருவாசகத்தை ஓதுவோர் கண்கள் கரையும். கல் மனம் உருகும். சிலிர்க்கும். அவ்வாறானால் இறைவனின் திருவாயிலிருந்து வந்த வேதங்கள் உயர்வு குறைந்தவையல்ல; அவை சட்டம்; விதி; விதியைச் சொல்லும்போது விழிநீர் பெருகாது. ஆனால், திருவாசகம் தோத்திரம்.திருவருட் பிரகாச வள்ளலார் திருமுறைகளைப் பற்றிச் சொல்லும்போது, ‘‘சாத்திரங்களில் சிறந்தது திருமந்திரம்; தோத்திரத்தில் சிறந்தது திருவாசகம்” என்று குறிப்பிடுகிறார். இது சிறந்த தோத்திரமாக இருந்தாலும் இதற்குள்ளும் எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்ற சாத்திரநுட்பங்களும் அடங்கியுள்ளன.

இறைவனுடைய அருள் இருந்தால் மட்டுமே இறைவனை வழிபட முடியும். ஒருமுறை காஞ்சி பெரியவரிடம் ‘‘அம்பாளை வணங்குவதால் என்ன பயன்?’’ என்று ஒருவர் கேட்க, ‘‘அதுவே அதற்குப் பயன்’’ என்று கூறினாராம். அவன் தாள் பணிய அவனருள் அவசியம் என்பதை,‘‘அவன் அருளாலே அவன்தாள்வணங்கி” என்று சாத்திர நுட்பம் ததும்பச் சொல்கிறார் மாணிக்க வாசகர். வழிபாடு என்று சொன்னால் தோத்திரம் பாடுவது என்பது இன்றியமையாதது. இறைவன் முன்பு எப்படித் தோத்திரம் சொல்ல வேண்டும் என்று சொல்லும்போது சொல்கிற பாடலின் பொருளை உணர்ந்து சொல்ல வேண்டும் என்பதை,‘‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்’’ என்கிறார்.

பாட்டின் பொருள் அறிந்து சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அறிதல் என்பது வேறு: உணர்தல் என்பது வேறு. அறிவு நம்மால் உண்டாவது; உணர்வு இறைவனால் வழங்கப்பெறுவது. ஆகவே, பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும் என்கிறார்.அறிவு கல்வியால் உண்டாகும். உணர்வு கடவுளருளால்தான் உண்டாகும். அந்தக் கல்வியை விலக்கி, கற்ற சுற்றத்தையும் விலக்கி இறைவன்பால் அன்பு செலுத்த வேண்டும் என்பதை,

‘‘உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!’’

– என்று பாடுகிறார் மாணிக்க வாசகர். இறைவன்பால் அன்பு செலுத்தும்போது ‘அது வேண்டும், இது வேண்டும்’ என்ற வேண்டுகோளுடன் வேண்டக் கூடாது. அதைத்தான் ‘‘கற்றாவின் மனம் போல்’’ என்கிறார், மாணிக்கவாசகர், ஒரு தாய் தன்பிள்ளைக்குப் பால் கொடுக்கும்போது ‘‘இந்தப் பிள்ளை வளர்ந்து பெரியவனாகி நம்மை நன்றாக கவனித்துக் கொள்ளும், நம்மீது அன்பு காட்டும், என்று எதிர்பார்ப்புடன் இருப்பது வழக்கம்தான்.

ஆனால், ஒரு பசுமாடு தன் பிள்ளைக்குப் பாலூட்டும்போது இந்தக் கன்றுக்குட்டி வளர்ந்து நமக்கு பல லிட்டர் பால் கொடுத்து வருமானத்தை அதிகரித்துத் தரும்” என்று எண்ணுவது கிடையாது. ஆகவே, ஒரு பசுமாடு கன்றின் மீது எப்படி யாதொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு காட்டுகிறதோ, அதைப்போலவே அன்பு காட்டி கடவுளின் காலடியில் கசிந்துருக வேண்டும் என்பதை,‘‘கற்றாவின் மனம்போல கசிந்துருக வேண்டுவனே’’ என்று வேண்டி, நாம் எப்படி வேண்ட வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் காட்டுகிறார் மாணிக்க வாசகர். இன்று இறைவனை வழிபடும் பலர் இறைவனிடமிருந்து என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வேண்டுதல் பட்டியலின் பக்கங்களைப் புரட்டியபடியே பக்தி செலுத்துகின்றனர்.

ஆனால், அது பக்தியல்ல; கொடுக்கல் வாங்கல் முறை. ஆனால், உண்மையான பக்தி முறை என்ன என்றால், ‘‘இறைவா! எனக்கு வேண்டியது என்னவென்று உனக்கே தெரியும். அதைவிட எனக்கு என்ன தர வேண்டும் என்பதும் உனக்குத் தெரியும். ஏன்? இதுவரை நான் அனுபவித்துக்கொண்டிருப்பவையெல்லாம் நான் வேண்டியா நீ தந்தாய். நீயாக அல்லவா அருளினாய்; ஆகவே உனக்கு எது விருப்பமோ அதையே செய் அல்லது செய்யாமல் இரு; அதுவும் உன்விருப்பம்’’ என்று தன் சார்ந்த முடிவுகள் அனைத்தையும் இறைவனிடம் விடுதலே சரியான பக்தி.

இதை,‘‘வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய் வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்தன் விருப்பு அன்றே’’ என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.

அப்படி நம் சார்ந்த முடிவுகளை இறைவன் எடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டு மென்றால், நம்மை முதலில் இறைவனிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்து விட்டால், இறைவன் நமக்கு வருகின்ற இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் உடன் இருப்பான். காரணம் அவன் நம்மை ஆளும் நாயகனாகிறான். அவன் ஆணைக்கு அடங்க வேண்டிய ஒன்றே நம்கடன். நமக்கு நன்மை செய்வதும் தீங்கு செய்வதும் நாயகனாகிய இறைவனின் கைகளில்தான் இருக்கிறது என்பதை,

‘‘அன்றே எந்தன் ஆவியும் உடலும்
உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட
போதே கொண்டிலையோ?
இன்றுஓர் இடையூறு எனக்கு உண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே?
நன்றே செய்வாய், பிழை செய்வாய்,
நானோ இதற்கு நாயகமே?”
என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்.

இவர் சொல்லும் கூற்று துறவியாக தனித்து வாழ்வோர்க்குப் பொருந்தும். இல்லறத்தில் வாழ்வோர்க்கு இது பொருந்துமா? காரணம், கணவன் சார்ந்த முடிவுகள் சிலவற்றை மனைவி எடுப்பார்; மனைவி சார்ந்த முடிவுகள் சிலவற்றைக் கணவன் எடுப்பார். இப்படியிருக்க, இல்லறத்தார் எப்படி இறைவனை நாயகனாக ஏற்பது? என்ற கேள்வி எழுகிறது. அதற்கும் மாணிக்க வாசகர் ஒரு வழிமுறையைச் சொல்லியிருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பே, தனக்கு வரப்போகும் கணவர் சிவனடியே சிந்திக்கும் குணமுடையவனாக இருக்கிறாரா? என்பதை அறிந்தே பிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டும். இதை, ‘‘எம்கெங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க’’ என்று குறிப்பிடுகிறார். இது ஆண்மகனுக்கும் பொருந்தும்.சரி இப்படி இவர் சொல்கிறாரே, இவரின் இந்த யோசனை சரிதானா? இதை இறைவன் அங்கீகரிக்கிறாரா? என்றால் அங்கீகரிக்கிறார். எவ்வாறெனில், மேற்கண்ட வரி திருவாசகத்தில் திருவெம்பாவையில் வருகிறது.

இந்தத் திருவெம்பாவையில் மெய்மறந்த இறைவன், ‘‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’’ என்று கேட்க, அதன்பிறகு மாணிக்கவாசகர் வாய் மலர்ந்ததுதான் திருக்கோவையார் ஆகும். எனில், திருவெம்பாவையில் மேற்கண்ட வரி உட்பட அனைத்தையும் இறைவன் ஏற்றுக்கொண்டார் என்பதுதான் பொருள். இது மட்டுமல்ல. இந்தத் திருவாசகத்தினுடைய முழுப்பொருளே இறைவனாகிய விழுப்பொருள்தான். ஆம், மாணிக்கவாசகரிடம் ‘‘தாங்கள் அருளிய திருவாசகத்திற்கு என்ன பொருள்?’’ என்று அவரிடம் கேட்டபோது, ‘‘இதோ இவர்தான் இதற்குப் பொருள்” என்று தில்லை நடராஜப் பெருமானைக் காட்டிவிட்டு அவருடனேயே ஒன்றறக்கலந்தார் என்பது வரலாறு.

ஆகவே, இறைவனே பொருளுரையாக இருக்கும் இலக்கியம்தான் திருவாசகம். இந்தத் திருவாசகத்திற்கு அவ்வளவு எளிதில் யாராலும் பொருள் சொல்ல இயலாது. அதனால்தான் தமிழில் நிறைமலையாகத் திகழ்ந்த மறைமலையடிகளார், திருவாசகத்தின் முதல் நான்கு பகுதிகளுக்கு மட்டுமே உரையை எழுதிவிட்டு, இனிமேல் எழுத இயலாது என விட்டுவிட்டார். ஆம், திருவாசகத்தின் பொருளை உணர வேண்டுமே தவிர, அறிய முடியாது. அறிவிப்பவைதான் உரைகள். உணர்தல் என்பது உள்ளிருந்துதான் ஏற்பட வேண்டும். இறையனுபவத்தால்தான் இந்தத் திருவாசகத்திற்கான பொருள் விளங்கும்.

இறைவனே பொருளாக இருக்கும் இந்தத் திருவாசகத்தை முதியோர்கள் இடைவிடாது ஓதுகிறார்கள். காரணம், இளமையில்தான் பொருள் (பணம்) தேடி அலைந்தோம்; இப்போதாவது இறைவனாகிய பொருளைத் தேடுவோம் என ஓதுகின்றனர். அப்படி ஓதுவதால் வாழ்வும் பொருளுடையதாகும். பிறவா நெறியும் கிடைக்கிறது.இறவாமை மற்றும் பிறவாமை ஆகிய இரண்டு மாங்காயையும் கவர்ந்துதரும் மாணிக்கக்கல் தான் திருவாசகம்.பொருள் இதுவெனக் காட்டி இறைவனுடன் உடனேயே கலந்த மாணிக்கவாசகரைப் போல், அவாதம் திருவாசகத்தைஓதுவோரும் இறைவனுடன் கலப்பர் என்பது திண்ணம்.

சரி, திருவாசகம் இறப்பு வீடுகளில் உயிரற்ற பிணத்தின் முன்பும் பாடப்படுகிறது. அதற்குக் காரணம், திருவாகத்தைக் கேட்டால் வீடுபேறு கிடைக்கும் என்பர். திருவாகத்தைக் கேட்டால் விலங்குகளும் பறவைகளும் கூட வீடுபேறு அடையும் என்பதை,

‘‘வாட்டமிலா மாணிக்க வாசகநின்
வாசகத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச்
சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும்
மெய்ஞ்ஞான
நாட்டமுறு மென்னிலிங்கு நான்அடைதல்
வியப்பன்றே.’’

என்று குறிப்பிடுகிறார் வள்ளலார். ஆகவே, இறந்தோர் காதில் விழுந்த திருவாசகம் அவர்களை அடுத்த பிறவிக்குவிட்டுவிடாது என்பது திண்ணம்.இதற்காக திருவாசகத்தை இறக்குக்கும்போது பாடுவதும், இறந்தபின் பிறர்பாடக் கேட்பதும் இதமட்டும் வழியல்ல. இறைவன் மட்டுமே உயர்ந்தவன்; நான் தாழ்ந்தவன் என்ற எண்ணம் இருக்க வேண்டியதுஅவசியமாகும். அதை, மாணிக்க வாசகர், இறைவன் தாயை விட உயர்ந்தவர் என்றும் தான் நாயைவிட இழிந்தவன் என்றும் கூறுகிறார்.

‘‘நாயிற் கடையாய்க்கிடந்த அடியேனுக்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே’’

– என்கிறார்.

உலகிலுள்ள உறவுகளிலேயே உயர்ந்த உறவு தாய்தான். அந்தத் தாயைவிடசிறந்தவன இறைவன் என்கிறார். தன்னை நாயைவிட இழிந்தவன் என்கிறார். காரணம், விலங்குகளிலேயே நாய் மட்டும் தான் தன்எச்சிலை தானே உண்ணும். அதனால் தன்னை அதைவிடவும் தாழ்த்துகிறார் மணிவாசகர். தன்னைத் தாழ்த்திக் கொள்வது ஒன்றே ஆன்மிகப்பாதையில் உயர்வதற்கான வழி. தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் பக்தி செய்யும் யாரும் வீடுபேறு என்ற சொல்லுக்கான விளக்கத்தைக்கூட விளங்கிக் கொள்ள முடியாது. இன்று பல சமய முதன்மையர்கள் இதற்கு மாறாக இருக்கிறார்கள். எப்படி பக்தி செலுத்துவது என்பதற்கு முன்னத்தி ஏர்தான் மாணிக்கவாசகர். உழுதுண்டு வாழும் உழவரை உலகவர் தொழுதுண்டு செல்வதைப்போல், மாணிக்கவாசகரைப்போல் அழ வேண்டாம். தொழுதாலே போதும். தொழுவோம்.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

The post சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுக appeared first on Dinakaran.

Tags : Kunkumam ,Ani Magam ,
× RELATED முகமறியா மனிதர்கள் மேல் வைத்த நம்பிக்கையே எனது தொழிலின் மூலதனம்!