×

இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஸ்டிரைக்: 300 விசைப்படகுகள் கரை நிறுத்தம்

மண்டபம்: இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடற்பகுதியில் இருந்து, கடந்த ஜூன் 22ம் தேதி காலை 405 விசைப்படகுகளில் 1,600க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அன்று நள்ளிரவு நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்த மீனவர்கள் உச்சிப்புளி தேவராஜ், நடராஜன், நாகசாமி தங்கச்சிமடம் சந்தியா, ஜிப்ரான் ஆகிய 5 பேரையும் கைது செய்து, படகையும் சிறைபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 5 வரை இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். மீன்பிடி தடைகாலம் நீங்கிய பின் தொழிலுக்கு சென்ற முதல் வாரம் முடிவதற்குள், 2வது முறையாக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்தும், 5 மீனவர்கள் மற்றும் படகை உடனே விடுவிக்க கோரியும், மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

The post இலங்கை கடற்படையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஸ்டிரைக்: 300 விசைப்படகுகள் கரை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Sri ,Lankan Navy ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை