×

செழிப்பான குளத்து பாசன பகுதி… தரிசான கடைவரம்பு பகுதி அணை நீரை எதிர்நோக்கும் விவசாயிகள்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டத்தில் நடக்கும் இருபோக சாகுபடியில் கன்னிப்பூ சாகுபடியின் போது அம்பை 16, திருப்பதிசாரம் 5 ரக நெல் சாகுபடியும், கும்பபூ சாகுபடியின்போது பொன்மணி, திருப்பதிசாரம் 3 ரக நெல் சாகுபடியும் செய்து வருகின்றனர். இதனை தவிர பாரம்பரிய நெல் ரகங்களை பல விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டத்தில் குளத்து, ஆற்றுப்பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி நடக்கிறது. தற்போது குமரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி பணி முடிந்துள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால், சாகுபடி பணிகள் தாமதம் ஆகி வருகிறது. குளத்து பாசன வசதி பெறும் பகுதிகளில் கடந்த இரு மாதத்திற்கு முன்பு சாகுபடி தொடங்கியது. குறிப்பாக பறக்கை, பால்குளம், தேரூர், சுசீந்திரம் உள்ளிட்ட குளங்கள் மூலம் பாசன வசதி பெரும் வயல்பரப்புகளில் சாகுபடி பணி நடந்தது.

தற்போது 80 நாட்களை கடந்து நெற்பயிர்களில் கதிர்வரும் நிலையில் உள்ளது. மேலும் பறக்கை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில் மழை இல்லாததால், துத்தநாகம் குறைபாடு இருப்பதாக வேளாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த குறைபாட்டால், பயிர்களில் மேல் பகுதி மஞ்சளாக காட்சி அளிக்கிறது. இதற்கு போதுமான உரங்கள் போடுவதற்கு விவசாய அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த பயிர்கள் வருகிற ஆடி மாதங்களில் அறுவடைக்கு தயராகிவிடும். ஆனால் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள மற்ற வயல்பரப்புகள் பாசனவசதி பெரும் வகையில் கடந்த ஜூன் 1ம் தேதி அணை திறக்கப்பட்டது.

அணை திறந்ததையொட்டி நாற்றங்கால் தயாரிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் நாற்றை பிடுங்கி தனியாக சாகுபடி செய்தனர்.
கால்வாய், சானல்களில் தூர்வாராததாலும், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதாலும், அணை தண்ணீர் கால்வாய்களில் சீராக செல்லவில்லை. இதனால் ஆற்றுப்பாசன வசதி பெறும் வயல்களில் நடவு செய்த நெற்பயிர்கள் கருகும் நிலை உருவானது. மேலும் கடைவரம்பு பகுதிகளுக்கு அறவே தண்ணீர் செல்லவில்லை. இதனை தொடர்ந்து விவசாயிகள் கால்வாய், சானல்களை தூர்வாரவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தற்போது ₹5.40 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒருரிரு நாட்கள் முடிந்து தண்ணீர் விடப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணை திறந்தபிறகு கிடைத்த தண்ணீரை கொண்டு வடசேரி, புத்தேரி பகுதியில் தற்போது சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. ஆனால் கடைவரம்பு பகுதியான தெங்கம்புதூர், மயிலாடி, இரட்டைகரை சானலை நம்பியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி பணி தொடங்காமலேயே வயல்களை தரிசாக போட்டுள்ளனர். சில விவசாயிகள் வயல்களை உழுதுபோட்டுள்ளனர். தண்ணீர் கிடைக்காத கடைமடை விவசாயிகள் கூறியதாவது: இன்னும் இரு தினங்களில் தண்ணீர் விடுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். தண்ணீர் வந்தபிறகு சாகுபடி பணியை தொடங்கவேண்டும் என கவலையுடன் தெரிவித்தனர்.

The post செழிப்பான குளத்து பாசன பகுதி… தரிசான கடைவரம்பு பகுதி அணை நீரை எதிர்நோக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Barren Kadavarambu ,Nagercoil ,Kumari district ,Dinakaran ,
× RELATED பூதப்பாண்டி அருகே 55 ஜெலட்டின் குச்சிகள், 22 டெட்டனேட்டர்கள் பறிமுதல்