×

லாரி டிரைவரை வெடிகுண்டு வீசி கொன்றது ஏன்?

* கல்லூரி மாணவர் பகீர் வாக்குமூலம் * தவறி விழுந்த 2 பேருக்கு மாவுகட்டு

புதுச்சேரி : புதுச்சேரி முதலியார்பேட்டை, தியாகு முதலியார் நகரைச் சேர்ந்தவர் ராஜி (32). லாரி டிரைவரான இவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். தேங்காய்திட்டில் கடந்த 21ம் தேதி சவ ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில் வேல்ராம்பேட் நிர்மல், உழந்தை கீரப்பாளையம் ஹரி ஆகியோருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் வீடுதிரும்பிய அவர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். தகவலின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடம் சென்று ராஜி உடலை மீட்டு கொலை வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான தனிப்படை குற்றவாளியை வலைவீசி தேடினர். இதனிடையே ராஜி கொலை வழக்கு தொடர்பாக நிர்மல், ஹரி மற்றும் வெடிகுண்டு தயாரித்து கொடுத்த லோக பிரகாஷ், மோகன்ராஜ் மற்றும் ரெமி, ரஞ்சித் உள்ளிட்ட 6 பேரை நேற்று முதலியார்பேட்டை புதிய பைபாஸ் சாலை பகுதியில் தனிப்படை கைது செய்தது. அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பிஓட முயன்ற நிர்மல், லோக பிரகாஷ், ஆகியோர் தடுமாறி கீழே விழுந்த நிலையில் அவர்களது வலதுகையில் முறிவு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டன. அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். கொலைக்கான காரணம் குறித்தும், வெடிகுண்டு தயாரித்தது பற்றியும், வேறு ஏதேனும் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் விசாரித்தனர். அப்போது முக்கிய குற்றவாளியான கல்லூரி மாணவர் நிர்மல் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தேங்காய்திட்டில் சம்பவத்தன்று நடந்த உறவினர் இறுதிச் சடங்கில் நண்பருடன் ராஜி பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு வேல்ராம்பேட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவரான நிர்மல், உழந்தை கீரப்பாளையம் ஹரி ஆகியோரும் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றுள்ளனர். அப்போது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த ராஜியிடம், நிர்மல் தரப்பு ஆசைப்பட்டு தங்களுக்கும் பட்டாசு தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு ராஜி மறுத்ததோடு சின்ன பசங்க எல்லாம் பட்டாசு வெடிக்கக் கூடாது என கூறியதோடு அனைவரின் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தி அடித்து விரட்டியுள்ளார்.

இதனால் அவமானம் தாங்க முடியாமல் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற நிர்மல், ஹரி இருவரும் அங்கிருந்த சக கூட்டாளிகளுடன் சேர்ந்து மேற்கண்ட சம்பவத்துக்கு பழிவாங்குவதற்காக கொலை சதி திட்டம் தீட்டியுள்ளனர். பின்னர் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்த மற்ெறாரு கல்லூரி மாணவரான லோக பிரகாஷ் உதவியுடன் தீபாவளி பட்டாசு மருந்தை பயன்படுத்தி நாட்டு வெடிகுண்டை அவசரமாக தயாரித்த நிலையில், பின்னர் கூட்டாளிகளுடன் நிர்மல் இறுதிசடங்கு முடித்துவிட்டு வீடு திரும்பிய ராஜியை பைக்கில் பின்தொடர்ந்தனர்.

வீட்டின் அருகே ராஜி வந்தபோது கண்இமைக்கும் நேரத்தில் அவர் மீது ஒரு நாட்டு வெடிகுண்டை நிர்மல் வீசியுள்ளார். அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதை உறுதி செய்ததும் ஒருவேளை வெடிகுண்டு வீச்சில் தப்பினால் கத்தியால் ராஜியை வெட்ட அவருடன் வந்து காத்திருந்த கும்பல் அங்கிருந்து தலைமறைவானது. இதுதொடர்பாக தகவல் கிடைக்கவே சம்பவ இடம் விரைந்து வந்த காவல்துறை கொலை வழக்கை பதிவு செய்து விசாரித்ததில் துப்பு துலங்கியது. இதையடுத்து முதலியார்பேட்டை பாலம் புதிய பைபாஸ் பகுதியில் பதுங்கியிருந்த 6 பேரின் இருப்பிடத்தையும் கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்திகள், அரியாங்குப்பம் பட்டாசு மருந்து, கூழாங்கற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோக பிரகாஷ் மீது உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வெடிகுண்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post லாரி டிரைவரை வெடிகுண்டு வீசி கொன்றது ஏன்? appeared first on Dinakaran.

Tags : Bakir ,Puducherry ,Puducherry Ithliarpet ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு