×

உரிமம் இன்றி மீன் பிடிப்பு வலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் முதியவர் மயங்கி விழுந்து சாவு

*காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு

சேத்தியாத்தோப்பு : காட்டுமன்னார்கோவில் அருகே மீன்வளத்துறை அதிகாரிகள் வலைகளை பறிமுதல் செய்ததால் முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் மீனவர்கள் உரிமம் பெற்று மீன் பிடிக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது வீராணம் ஏரி வற்றத்தொடங்கியதால் பலர் உரிமம் இல்லாமல் மீன் பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிக்கு புகார் வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வீராணம் ஏரியில் கொள்ளுமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிமம் இல்லாமல் மீன் பிடித்த சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் வடக்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நாகராஜ் (60) என்பவரிடம் இருந்து வலையை பறிமுதல் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து நாகராஜின் மகன் விஜய் புத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சடலத்தை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post உரிமம் இன்றி மீன் பிடிப்பு வலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் முதியவர் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Katumannargo ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...