×

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி, வேப்பூர் சந்தையில் ₹12 கோடிக்கு ஆடு விற்பனை

செஞ்சி : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி மற்றும் வேப்பூர் சந்தையில் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று நடந்த வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தது. தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து இருந்தனர். பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக ஏராளமான இஸ்லாமியர்களும் குவிந்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி முதலே விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளை கொண்டு வந்தனர்.

இதில் வெள்ளாடுகள் ஜோடி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் 5 மணி நேரத்தில் மட்டும் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும், விவசாயிகளும் தெரிவித்தனர்.

வேப்பூர்: கடலூர் மாவட்டம், வேப்பூரில் நடந்த வார ஆட்டு சந்தையில் நேற்று ஆடுகளை வாங்க திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் அதிகாலை 4 மணியில் குவிந்தனர். 5000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது. ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை நடந்தது. 5மணி நேரத்துக்குள் ரூ.5 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி, வேப்பூர் சந்தையில் ₹12 கோடிக்கு ஆடு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chenji ,Vepur market ,Bakreet ,Viluppuram district ,Chenji, Vepur Market ,Bakreith feast ,
× RELATED செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில்...