×

சென்னை மாநகரம் முழுவதும் 1,336 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4000 சிசிடிவி கேமராக்களை ஒரே இடத்தில் கண்காணிக்க சிறப்பு கட்டுப்பாட்டு மையம்: போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ், குற்றங்களை தடுத்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக, மாநகரம் முழுவதும் 1,336 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4008 சிசிடிவி கேமராக்களை ஒரே இடத்தில் கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மையத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இந்தியாவில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னை மக்களின் பாதுகாப்பை, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க ‘நிர்பயா’ பாதுகாப்பான நகர திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் 8வது மாடியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரடி கட்டுப்பாட்டில் சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சென்னை மாநகர காவல் எல்லை முழுவதும் ஒரே இடத்தில் இருந்து அடையாளம் காணும் வகையில் 1,750 முக்கிய இடங்கள் தேர்வு செய்து அந்த இடங்களில் மொத்தம் 5,250 சிசிடிவி கேமராக்கள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்ட பணியாக சென்னையில் 1,336 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த பகுதிகளில் மொத்தம் 4,008 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிசிடிவி பதிவுகள் அனைத்தும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் 1,336 இடங்களில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஒரே இடத்தில் இருந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.

சிசிடிவி கேமராவுடன் நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், குற்ற நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்யும், அதோடு இல்லாமல் குற்றச்சம்பவங்கள் நடந்ததால் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு உரிய எச்சரிக்கையை உடனுக்குடன் அளிக்கும். இதனால் உடனே குற்றம் நடக்கும் இடத்திற்கு போலீசார் விரைந்து செல்ல இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு மையத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, லோகநாதன், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

* குற்றம் செய்தால் கைது உறுதி

சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் சென்னையில் 1,336 இடங்களில் யாரேனும் செயின், செல்போன் மற்றும் கைப்பை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டாலோ, அல்லது பெண்களை கேலி செய்தாலோ, ஆண்களிடையே அல்லது வன்முறை சூழ்நிலையில் சிக்கியுள்ள பெண்கள், கடத்தல், பொருட்கள் சூறையாடுதல், வாகன திருட்டு கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்துதல் உள்ளிட்ட காணொளி காட்சிகளை பகுப்பாய்வு செய்து கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு போலீசாருக்கு தகவல் அனுப்பி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

* சிறப்பம்சங்கள்

மாநகரில் 1,336 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 4008 சிசிடிவி கேமராவில், செயற்கை நுண்ணறிவு அடைப்படையிலான மென் பொருள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஏன் என்றால் சிசிடிவி கேமராவில் பதிவாகும் அவசர சைகளை கூட துள்ளியமாக மென்பொருளால் நிலைமையை பகுப்பாய்வு செய்து, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும். அதன் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க இந்த புதிய மென்பொருள் உதவியாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

* சிறப்பு வசதி

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் பதிவாகும் நேரலை காணொளி காட்சிகளை சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் 6 இணை கமிஷனர்கள் மற்றும் 12 துணை கமிஷனர்கள் தங்களது அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர் அதிகாரிகள் தங்களது அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள 1,336 இடங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க இது உதவியாக இருக்கும்.

The post சென்னை மாநகரம் முழுவதும் 1,336 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4000 சிசிடிவி கேமராக்களை ஒரே இடத்தில் கண்காணிக்க சிறப்பு கட்டுப்பாட்டு மையம்: போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Special Control Center ,Chennai City ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகரில் சீரான மின்விநியோகம்...