×

மதுரவாயலில் பரபரப்பு கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி பலி: அழுகியநிலையில் சடலம் மீட்பு

பூந்தமல்லி: மதுரவாயலில், கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார். சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் மெட்ரோநகர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கலா (52) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம், மொட்டைமாடி உள்ளிட்ட பகுதிகளையும் சுத்தம் செய்து கொடுக்கும் வேலையையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது 2 மகள்கள் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை காணவில்லை என மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்‌.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து அந்த குடியிருப்பு வாசிகள், மதுரவாயல் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கழிவுநீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அதில் இறந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது தெரியவந்தது. அதை மீட்டு விசாரித்தபோது வீட்டு வேலை செய்து வந்த கலா என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிதனர்.

விசாரணையில், கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டு வேலை செய்ய குடியிருப்புக்கு கலா வந்ததும், அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து, மூச்சுதிணறி இறந்ததும், 3 நாட்களாக வீட்டுக்கு செல்லாததால் கலா வேறுஎங்காவது சென்றிருக்கலாம் என அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் நினைத்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கழிவுநீர் தொட்டி அருகே சுத்தம் செய்யும்போது தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது வேறு எதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். வீட்டு வேலைக்கு வந்த மூதாட்டி கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரவாயலில் பரபரப்பு கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி பலி: அழுகியநிலையில் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Poontamalli ,Alapakkam Metronagar ,Chennai Madurawayal ,Madurawayal ,
× RELATED மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்