×

பால் விலையை விவசாயிகளே தீர்மானிக்கும் முறை: பால்வளத்துறை அமைச்சர் பேட்டி

திருவள்ளூர்: விவசாயிகள் பால் விலையை அவர்களே தீர்மானிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டுவருகிறது. இந்த பால் பண்ணையில் இன்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அமைச்சர் மனோதங்கராஜ் பால் உற்பத்தி மற்றும் பாலின் தரம் குறித்து ஆய்வு செய்யும் பொருட்கள் பால் பண்ணையின் உற்பத்தி பிரிவு, குளிரூட்டும் பிரிவு, பால் பாக்கெட் தயாரிக்கும் இடம், பால் பவுடர் சேமிப்பு கிடங்கு, தரக்கட்டுப்பாட்டுப்பிரிவு மற்றும் பொறியியல் பிரிவுகளில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் பால் கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவின் பால் குறைந்த விலையில் தரமாக வழங்கப்படுகிறது. ஆவின் பணியாளர்களுக்கு பயோ மெட்ரிக்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் பால் விலையை அவர்களே தீர்மானிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் வெளிமாநிலத்திற்கு பால் கொண்டு செல்லாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஆவின் நிர்வாகம் செய்து கொடுக்கும். எந்த ஒரு பால்நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் எந்த சலசலப்புக்கும் ஆவின் நிர்வாகம் அஞ்சாது. மேலும் தமிழ்நாட்டில் எருமை மாடுகள் எண்ணிக்கை குறைந்து வருவது ஆபத்தான ஒன்று. அதனை பெருக்கும் நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் வினீத், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், ஆவின் பொது மேலாளர் ரமேஷ் குமார், துணைப் பதிவாளர் (பால்வளம்) சித்ரா, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சந்திரபோஸ், முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கி.ரகுகுமார், மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, கால்நடை மருத்துவர்கள் கே.எஸ்.உமாசங்கர், அனீஷ், சதீஷ் குமார், திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், நன்றி அவைத் தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான த.எத்திராஜ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பால்வளத் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.

The post பால் விலையை விவசாயிகளே தீர்மானிக்கும் முறை: பால்வளத்துறை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Kakkalur ,
× RELATED காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டையில்...