×

உயர் கல்வித்துறையின் அரசாணையை வைத்து சாதி அரசியல்: பாமகவுக்கு திருமாவளவன் கண்டனம்

சென்னை: அரசாணை 161 குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும், உயர் கல்வித்துறையின் அரசாணையை வைத்து பாமக சாதி அரசியல் செய்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்ட அறிக்கை: கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அது முடிவுறும் தருவாயில் உள்ளது. இச்சூழலில் பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கை உயர் கல்வித்துறை மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு எதிராக உள்நோக்கம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. அத்துடன், மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான இடைவெளியை உருவாக்குவதாகவும் உள்ளது. அவரது அறிக்கை உண்மையை திரித்துக் கூறுவதாக உள்ளது.
அதாவது, உயர்கல்வித் துறையின் அரசாணை எண் 161ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்கள் முதலில் இஸ்லாமியர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்றும், அதன்பின்னரும் காலியிடங்கள் இருந்தால் அவை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்றும், போதிய எண்ணிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லாத சூழலில் மட்டும்தான் அந்த இடங்கள் பட்டியலினம், பழங்குடியினரை கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த அரசாணையில் அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை என்பதே உண்மையாகும். அதில், நிரப்பப்படாத பிற்படுத்தப்பட்டோருக்கான காலியிடங்களை மற்ற சமூகத்தினரைக் கொண்டு நிரப்பலாம் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதை தம் விருப்பம்போல அவர் திரித்துக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. அரசுக் கல்லூரியில் சேரும் அந்த மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை உள்நோக்கம் கொண்ட சாதி அரசியலாகவுள்ளது. கல்லூரி முதல்வர்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், தற்போது நடைமுறையிலுள்ள அரசாணை எண்-161 குறித்து தெளிவை உருவாக்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

The post உயர் கல்வித்துறையின் அரசாணையை வைத்து சாதி அரசியல்: பாமகவுக்கு திருமாவளவன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Bamagawa ,Chennai ,Bamaka ,
× RELATED தமிழ்நாட்டில் தாமரை மலர இடமே இல்லை 40...