×

ஓமனை வீழ்த்தியது இலங்கை: 10 விக்கெட் வித்தியாசத்தில்

புலவாயோ: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று பி பிரிவு லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அணியை எளிதாக வீழ்த்தியது. குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. லாகிரு குமாரா வேகம் மற்றும் வனிந்து ஹசரங்காவின் சுழலை சமாளிக்க முடியாமல் திணறிய ஓமன் அணி 30.2 ஓவரிலேயே வெறும் 98 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 4 வீரர்கள் டக் அவுட்டான நிலையில், 3 பேட்ஸ்மேன்கள் தலா 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். அயான் கான் அதிகபட்சமாக 41 ரன் (60 பந்து, 4 பவுண்டரி) விளாசினார். ஜதிந்தர் சிங் 21, ஃபயாஸ் பட் 13* ரன் எடுத்தனர்.

இலங்கை பந்துவீசில் வனிந்து ஹசரங்கா 7.2 ஓவரில் 2 மெய்டன் உள்பட 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். லாகிரு குமாரா 8 ஓவரில் 2 மெய்டன் உள்பட 22 ரன்னுக்கு 3 விக்கெட், கசுன் ரஜிதா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 99 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பதும் நிசங்கா, திமத் கருணரத்னே அதிரடியாக ரன் குவிக்க, இலங்கை அணி 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன் எடுத்து அபாரமாக வென்றது. நிசங்கா 37 ரன் (39 பந்து, 5 பவுண்டரி), கருணரத்னே 61 ரன்னுடன் (51 பந்து, 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் அசத்திய ஹசரங்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இலங்கை அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் பி பிரிவில் முதலிடம் வகிக்கிறது (4 புள்ளி).

ஸ்காட்லாந்து அசத்தல்: புலவாயோ தடகள கிளப் வளாகத்தில் நடந்த மற்றொரு பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 111 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை பந்தாடியது. டாஸ் வென்ற யுஏஇ முதலில் பந்துவீச… ஸ்காட்லாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன் குவித்தது. கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் அதிரடியாக 127 ரன் (136 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். லீஸ்க் 41, கிரீவ்ஸ் 22 ரன் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய ஐக்கிய அரபு அணி 35.3 ஓவரில் 171 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. கேப்டன் வசீம் 36, பாசில் ஹமீத் 30, அப்சல் கான் 21, அலி நாசர் 19 ரன்னில் வெளியேறினர். கார்த்திக் மெய்யப்பன் 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்காட்லாந்து பந்துவீச்சில் சபியான் ஷரீப் 4, கிறிஸ் சோல் 3, மெக்கல்லன், வாட், கிரீவ்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பிரிவில் ஸ்காட்லாந்து அணியும் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஒமான் (3 போட்டியில் 4 புள்ளி), அயர்லாந்து (0), யுஏஇ (0) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.

The post ஓமனை வீழ்த்தியது இலங்கை: 10 விக்கெட் வித்தியாசத்தில் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Oman ,Bulawayo ,ICC World Cup One ,Qualifier B Division League Match ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...