×

இந்திய அணியில் புஜாரா அதிரடி நீக்கம்: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், அனுபவ வீரர் செதேஷ்வர் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தோல்விக்கு பிறகு, அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டிகள் ஜூலை 12, ஜூலை 20ல் தொடங்கி நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29, ஆக.1 தேதிகளிலும், டி20 போட்டிகள் ஆக. 3, 6, 8, 12, 13 தேதிகளிலும் நடைபெறும். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களுக்கான இந்திய அணிகளை பிசிசிஐ நேற்று அறிவித்தது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவேன், இனி டெஸ்ட் கேப்டனாக தொடர மாட்டேன் என்று ரோகித் சர்மா அறிவித்திருந்த நிலையில்… இந்த தொடர்களுக்கான கேப்டனாக ரோகித் ஷர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ரகானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் புஜாரா (35 வயது) நீக்கப்பட்டுள்ளார். ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அவர் முறையே 14 ரன், 27 ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெயிக்வாட், முகேஷ் குமார் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். கடுமையான விமர்சனங்களுக்கு இடையே விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், கே.எஸ்.பரத் தேர்வாகி உள்ளனர். சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தொடக்க வீரராக அசத்திய ருதுராஜ் ஏற்கனவே 9 டி20, 1 ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளயாடி உள்ள நிலையில், டெஸ்ட் அணியிலும் அறிமுகமாகிறார். மொத்தத்தில் புஜாரா, உமேஷ் யாதவ் தவிர டெஸ்ட் பைனலில் இடம் பெற்ற வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் அணிக்கு ரோகித் ஷர்மா மீண்டும் கேப்டனாகி உள்ளதால் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னொரு விக்கெட் கீப்பராக இஷான் உள்ளார். முகேஷ் குமாருக்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெறாத சாஹல், சூரியகுமார், குல்தீப், உம்ரான் மாலிக் ஆகியோர் ஒருநாள் அணியுடன் இணைந்துள்ளனர். டெஸ்ட், ஒருநாள் தொடர்களுக்கான அணிகளை அறிவித்த பிசிசிஐ, வெஸ்ட் இண்டீசுடன் நடக்க உள்ள டி20 தொடருக்கான அணியை அறிவிக்கவில்லை.

* இந்திய டெஸ்ட் அணி: ரோகித் (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ், கோஹ்லி, ஜெய்ஸ்வால், ரகானே (துணை கேப்டன்), பரத் , இஷான் (விக்கெட் கீப்பர்கள்), ஆர்.அஷ்வின், ஜடேஜா, ஷர்துல், அக்சர், சிராஜ், முகேஷ் குமார், உனத்கட், நவ்தீப் சைனி.

* இந்திய ஒருநாள் அணி: ரோகித் (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ், கோஹ்லி, சூரியகுமார், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், இஷான் (விக்கெட் கீப்பர்கள்), ஷர்துல், ஜடேஜா, அக்சர், சாஹல், குல்தீப், உனத்கட், சிராஜ், உம்ரன் மாலிக், முகேஷ் குமார்.

The post இந்திய அணியில் புஜாரா அதிரடி நீக்கம்: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் appeared first on Dinakaran.

Tags : Pujara ,West Indies Test ,Mumbai ,Cheteshwar ,West Indies ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!