×

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் நிலவொளி பள்ளியில் கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் நிலவொளி பள்ளியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், சேர்மன் சாமிநாதன் முதலியார் நகராட்சி மேல்நிலை பள்ளியில் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு நிலவொளி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 14 வயதிற்கு மேற்பட்ட உழைக்கும் தொழிலாளர்கள், இழந்த கல்வியை பெறுவதற்காக நிலவொளி பள்ளிகளை அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த இறையன்பு, அறிவொளி இயக்கத்தின் மூலம், 23.1.1998 அன்று சி.எஸ்.எம் மேல்நிலைப்பள்ளியில் நிலவொளி பள்ளியினை தொடங்கினார். இப்பள்ளி இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பெற்றோர், பொதுமக்கள், உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பயின்று வருகின்றனர். இந்த நிலவொளி பள்ளியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, 8ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்புகளில் புதியதாக சேர்ந்த கற்போர்களுக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். கற்போர்களுடன் உரையாடி அவர்களை ஊக்குவித்தார். கற்போர்களின் கல்வி நிலையையும், நிலவொளி பள்ளியில் கற்போர்களை சேர்க்கப்படும் விவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது, அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற கற்போர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். காஞ்சிபுரத்தில், 2 நிலவொளி பள்ளிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலவொளி பள்ளியின் மூலம் 1998 முதல் 2023 வரை 14,553 ஆண்களும், 6,177 பெண்களும், மொத்தம் 20,730 பயன் அடைந்துள்ளனர். இப்பள்ளியில், படித்த 47 நபர்கள் தமிழ்நாடு அரசின் தேர்வாணைய தேர்வில் வெற்றிபெற்று, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும், 3 கற்போர் தமிழ்நாடு அரசில் பிரிவு அலுவலர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) புஷ்பா, நிலவொளிப் பள்ளிகளின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணலரசு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.மோகனவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் நிலவொளி பள்ளியில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Moonlight School ,Kanchipuram ,Kalachelvi Mohan ,Kanchipuram Pilliyarpalayam ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...