×

அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1000 பஸ்கள் வாங்க அரசு நடவடிக்கை: நெல்லை கோட்டத்துக்கு 129 புதிய பஸ்கள் ஒதுக்கீடு

நெல்லை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.500 கோடியில் ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நெல்லை கோட்டத்துக்கு 129 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், கோவை, மதுரை, நெல்லை உள்பட 8 கோட்டங்கள் மூலம் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களை பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வருகிறது. தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சுமார் 2 ஆயிரம் பஸ்கள் நீண்ட தூரங்களுக்கும், அன்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன. இதில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி 15 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டுள்ள பழைய பஸ்களை கழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதின் பேரில் அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 1500 பழைய பஸ்களை கழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கழிக்கப்படும் பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை வாங்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி ரூ.500 கோடியில் ஆயிரம் பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் விழுப்புரம் கோட்டத்துக்கு 190, கோவைக்கு 163, கும்பகோணம் 155, மதுரை 163, நெல்லைக்கு 129 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 200 புதிய பஸ்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பழைய நல்ல நிலையில் உள்ள சட்டங்களை தேர்வு செய்து முதல்கட்டமாக 125 பஸ்கள் புதிய பாடிகட்டும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதில் பாடி கட்டும் பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கரூரில் 43, மதுராந்தகத்தில் 25, விராலிமலையில் 32, பெங்களூரில் 25 ஆக மொத்தம் 125 பஸ்கள் புணரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக போக்குவரத்து துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

The post அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1000 பஸ்கள் வாங்க அரசு நடவடிக்கை: நெல்லை கோட்டத்துக்கு 129 புதிய பஸ்கள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Government Transport Corporation ,Paddy Fort ,Paddy ,Tamil Nadu Government Transport Corporation ,Transport Corporation ,Dinakaran ,
× RELATED அரசு போக்குவரத்து கழக கிளையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு