×

ஒடுக்கப்பட்ட மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டுள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவது தொடர்பாக 15 எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று பாட்னாவில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பல்வேறு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடந்தது.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் உருவாக்குவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க, மக்களாட்சியை தத்துவத்தை நிலைநிறுத்த, ஏழை மக்களின் நலனைக் காக்கவே பாட்னாவில் கூடினோம். பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியது; இதேபோல, தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் என்று பேசினேன். எந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அக்கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறினேன்.

தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பது இருக்க கூடாது; குறைந்தபட்ச செயல் திட்டங்களை உருவாக்க குழு அமைக்க வேண்டும் என்று பேசியுள்ளேன். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை. பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டமாக இன்று நடந்தது என்று நினைக்க வேண்டாம். ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக வேண்டும் என பேசினேன். தமிழ்நாட்டைப் போன்று அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை வலியுறுத்தினேன்.

பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டுள்ளனர். நிச்சயமாக அகில இந்திய அளவில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 2023 ஜூன் 23ல் கூடினார்கள், 2024ல் வெற்றி பெற்றார்கள் என வரலாற்றில் பதிவாக வேண்டும் இவ்வாறு கூறினார்.

The post ஒடுக்கப்பட்ட மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bajaka ,CM G.K. Stalin ,Chennai ,Bajaj ,CM ,G.K. Stalin ,Lok Sabha ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...