×

சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தொடங்கி வைத்தார் சங்கர் ஜிவால்

 

சென்னை: சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். சென்னை வாசிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், “நிர்பயா” பாதுகாப்பான நகரத் திட்டங்களின் (Nirbhaya Safe City Projects) ஒரு பகுதியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை துவக்கி வைத்தார். சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் எல்லை முழுவதும் அடையாளம் காணப்பட்ட 1,750 முக்கிய இடங்களில் மொத்தம் 5,250 சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக, 1,336 இடங்களில் 4,008 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த 1,336 கேமராக்களின் காணொளி பதிவுகள் மேற்படி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிக்கப்படும். மேலும், சிசிடிவி கேமரா காணொளி பதிவுகள் சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் கட்டுப்பாடு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்படும். மேற்கூறிய திட்டத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், குற்ற நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்யும் அம்சத்துடன் உரிய எச்சரிக்கை செய்திகளை உடனுக்குடன் வழங்குவதால், குற்ற நிகழ்வுகள் மீது உடனுக்குடன் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.

குற்றச் சம்பவங்களான செயின், செல்போன் மற்றும் கைப்பை பறிப்பு, பெண்களை கேலி செய்தல், ஆண்களிடையே அல்லது வன்முறை சூழ்நிலையில் சிக்கியுள்ள பெண்கள், கடத்தல், பொருட்களை சூறையாடுதல், வாகனத் திருட்டு கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்துதல் உள்ளிட்ட காணொளி நிகழ்வுகளை பகுப்பாய்வுகள் செய்யும் அம்சம் உள்ளது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மென்பொருள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். ஏனெனில் கேமரா காணொளி பதிவாக்கும் அவசர சைகளை கூட AI மென்பொருளால் நிலைமையை பகுப்பாய்வு செய்து, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க எச்சரிக்கும்.

காணொளி பதிவுகள் தரவு மையத்தில் சேமிக்கப்பட்டு, தரவு மீட்பு மையத்திலும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி கேமராக்களின் நேரலை காட்சிகள் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிக்கப்படுவது போல, 6 காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் 12 காவல் துணை ஆணையாளர் அலுவலகங்களிலும் கண்காணிக்கும் வசதி செய்யப்படும்.

The post சென்னை பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தொடங்கி வைத்தார் சங்கர் ஜிவால் appeared first on Dinakaran.

Tags : Sankar Jiwal ,Integrated Command and Control Centre ,Chennai ,Coordinated Command and Control Centre ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!