×

குன்னூர் அருகே சிறுத்தை வேட்டையாடிய பசுமாட்டின் வயிற்றில் 25 கிலோ பிளாஸ்டிக்

ஊட்டி : குன்னூர் அருகே கோடேரி பகுதியில் சிறுத்தை வேட்டையாடிய பசுமாட்டை பிரேத பரிசோதனை செய்யபோது அதன் வயிற்றில் 25 கிலோ பிளாஸ்டிக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் 19 வகையான ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. பொதுமக்கள் தங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது இடங்கள் வனப்பகுதிகளில் தூக்கி எறிந்து விடுகின்றனர். இதனால் கால்நடைகள் மற்றும் உணவு தேடி சுற்றி திரியும் காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் இவற்றை உண்டு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை வீசி எறிய வேண்டாம் என அறிவுறுத்தினாலும் பொதுமக்கள் பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் குன்னூர் அருகே கோடேரி பகுதியில் பசுமாட்டை சிறுத்தை வேட்டையாடியுள்ளது. பசுமாட்டின் உடல் தேயிலை தோட்டத்தில் கிடந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் அப்பகுதி சென்று இறந்து கிடந்த பசுமாட்டை பார்வையிட்டனர்.

பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அதன் வயிற்றில் நூடுல்ஸ் பிளாஸ்டிக் பாக்கெட், யூரியா பை என சுமார் 25 கிலோ பிளாஸ்டிக் இருந்தது தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின் அதன் உடல் புதைக்கப்பட்டது. இது குறித்து குன்னூர் நுகர்வோர் சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை என்பது பெயரளவில்தான் உள்ளது. பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி என்ற பெயரை வேறும் விளம்பரங்களால் எட்ட முடியாது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பணிகள் முறையாக நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

The post குன்னூர் அருகே சிறுத்தை வேட்டையாடிய பசுமாட்டின் வயிற்றில் 25 கிலோ பிளாஸ்டிக் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Koderi ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்