×

பீகார் மாநிலம் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடங்கியது; 16 கட்சி தலைவர்கள் பங்கேற்பு..!!

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடங்கியுள்ளது. எதிர்கட்சிகளை ஒருங்கினைத்து பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டம் நடத்துகிறார். பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 16 கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் பங்கேற்கின்றனர். திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி பங்கேற்கின்றனர். ஆம் ஆத்மீ சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், சஞ்சய் சிங், ராகவ் சட்டா பங்கேற்பு ஐக்கிய ஜனாதா தளம் சார்பில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் லல்வன் சிங் பங்கேற்கின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் லாலு பிரசாத் யாதவ்,பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா பங்கேற்றனர்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், சுப்ரியா சுலே மற்றும் பிரஃபுல் பட்டேல் பங்கேற்கின்றனர். சிவசேனை சார்பில் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் பங்கேற்கின்றனர். சமாஜ்வாதி கட்சி சார்பில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் பங்கேற்கிறார். ஜம்மு -காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பங்கேற்கிறார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பங்கேற்கிறார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் தீபங்கர் பட்டாச்சார்யா பங்கேற்கிறார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பங்கேற்கிறார். பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடங்கவுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தோற்கடிக்க வலுவான கூட்டணியை அமைக்க எதிர்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கும் முன் பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி இந்தியாவில் நடப்பது கொள்கை யுத்தம். காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை நடத்தும் வேளையில் பாஜக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம் என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய கார்கே ஜனநாயகத்தை காக்க அனைவரும் வேறுபாடுகளை களைந்து ஓரணியில் திரள வேண்டும் என கூறினார். இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. குறைந்தபட்ச பொது செயல்திட்டம் வகுப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பிட்ட தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தவும் எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

The post பீகார் மாநிலம் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடங்கியது; 16 கட்சி தலைவர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bihar State ,Patna ,Chief Minister ,Nitishkumar ,Bihar ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...