×

ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து 20 நாட்களுக்கு பின் 5 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது ரயில்வே நிர்வாகம்!!

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து 20 நாட்களுக்கு பின் 5 உயர் அதிகாரிகளை ரயில்வே நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது. ஒடிசாவில் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2ம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்தில் 291 பேர் பலியாகி விட்டனர். சுமார் 1000 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தின் பின்னணியில் நாசவேலை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ரயில்வே வாரியத்தின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு விசாரணை குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 20 நாட்களுக்கு பின்னர் 5 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரக்பூர் கோட்ட ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) ஷுஜாத் ஹாஷ்மி,SER மண்டலத்தின் முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் PM சிக்தர், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி சந்தன் அதிகாரி, முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் DB கசார் மற்றும் முதன்மை தலைமை வணிக மேலாளர் எம்டி ஓவைஸ் ஆகிய உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா, 5 உயர்மட்ட ரயில்வே அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தது வழக்கமான ஒன்று தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து 20 நாட்களுக்கு பின் 5 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது ரயில்வே நிர்வாகம்!! appeared first on Dinakaran.

Tags : Odisha train accident ,Balasore ,Dinakaran ,
× RELATED சூப்பர்சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி