×

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல் உடன்குடி பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை

தூத்துக்குடி, ஜூன் 23: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசியதாவது: உடன்குடி பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்வும், கொள்முதல் விலையை உயர்த்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சாத்தான்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சாத்தான்குளம் பகுதிகளில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி -கருமேனியாறு -நம்பியாறு நதிநீர் இணைப்பு பணிகள், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என கருதப்படுகிறது. பனை மரத்தில் இருந்து கள் இறக்குவதாக போலீசாரால் போடப்படும் வழக்குகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.

மேலும் பனைமர கள்ளை உணவு பொருளாக அங்கீகரிக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. இதுகுறித்தும் பரிசீலிக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் விற்பனை நிலையங்களுக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் ஒரே நேரத்தில் விநியோகிக்கப்படும். வரும் காலங்களில் இவை அமல்படுத்தப்படும். வேம்பார் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள முள் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை 55.18 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 86.45 கன அடியாக உள்ளது. 104.75 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 3654 மெட்ரிக் டன் யூரியா, 2635 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 1222 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 353 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிக்கப்படும் விளைபொருட்களுக்கு பொருளீட்டு கடன் பெற்று கொள்ளலாம். தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த 9ம் தேதி வரை 486 விவசாயிகளுக்கு ரூ.6.57 கோடி விவசாய பயிர் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. அரசு குளங்களில் இருந்து வண்டல் மண் மற்றும் கரம்பை மண் விவசாய பயன்பாட்டிற்கு வழங்க முதற்கட்டமாக மாவட்டத்தில் 95 விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உத்தரவு வழங்கப்பட உள்ளது, என்றார். கூட்டத்தில் டிஆர்ஓ அஜய் சீனிவாசன், சப்-கலெக்டர் கவுரவ் குமார், வேளாண்மை துறை இணை இயக்குநர் பழனி வேலாயுதம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முத்துக்குமாரசாமி, நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

The post விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல் உடன்குடி பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Collector ,Senthilraj ,Ebenkudi ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில்...