தர்மபுரி, ஜூன் 23: தர்மபுரி சிப்காட்டிற்கு ₹17 கோடியில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில், வேலை வாய்ப்பு இல்லாததால் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் திருப்பூர், கோவை, கரூர் போன்ற இடங்களுக்கு வேலை தேடிச்செல்லும் நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில், மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தர்மபுரியில் புதிய சிப்காட் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தடங்கம், அதகப்பாடி, பாலஜங்கமன அள்ளி, அதியமான்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய வகையில் சிப்காட் அமைக்க 1,733 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 1,733 ஏக்கருக்கு 2,100 ஏக்கர் நிலம் எடுத்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும் பணி முடிந்தாலும், மேலும் 132 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மேலும், சிப்காட்டில் சாலைகள் அமைக்கவும், மின்விளக்கு பொருத்தவும் டெண்டர் விடப்பட்டது.
இந்நிலையில், தடங்கம் கிராமம் அருகே தர்மபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சிப்காட்டிற்கு செல்ல ₹17 கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை (இணைப்பு சாலை) அமைக்கப்படுகிறது. 1.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக இப்பணிகள் சுறுசுறுப்பாக நடக்கிறது. விரைவில் மின்கம்பங்கள் நடப்பட்டு, மின்விளக்கு பொருத்தும் பணி நடைபெறும். சிப்காட் பணிகள் முடிந்த நிலையில் உள்ளதால், தனியார் எலக்ட்ரிக் பைக் கம்பெனி உள்ளிட்ட 8 நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளன. தர்மபுரி சிப்காட்டில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. சுற்றுச்சூழல் சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆவதால், கம்பெனிகள் அமைக்க தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரியில் கடந்த 2018ம் ஆண்டு, சிப்காட் பணிகள் மேற்கொள்ள அலுவலகம் அமைக்கப்பட்டது. டிஆர்ஓ, 2 தாசில்தார் மற்றும் விஏஓ.,க்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக இடங்கள் தேர்வு செய்து, சர்வே செய்யப்பட்டது. தற்போது அரசுக்கு 2,100 ஏக்கர் நிலம் தேர்வு செய்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 132 ஏக்கர் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. முதல்கட்டமாக சிப்காட்டில் ₹17 கோடியில் நான்கு வழிச்சாலை, தர்மபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. ெதாடர்ந்து மின்கம்பம் நட்டு மின்விளக்கு பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. சிப்காட்டில் தொழிற்சாலைகள் அமைக்க பதிவு நடக்கிறது. இதுவரை 8 நிறுவனங்கள் அமைய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சான்றிதழ் கிடைத்தவுடன், ஆலைகள் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கும்,’ என்றனர்.
The post ₹17 கோடியில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.