×

வட்டி வசூலிப்பில் முறைகேடு புகார் அறந்தாங்கி கூட்டுறவு வங்கியில் ஐடி ரெய்டு: சோதனை நடந்தபோது எஸ்கேப்பான விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளர்

புதுக்கோட்டை: அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளரான வங்கியின் தலைவர் திடீரென எஸ்கேப்பானார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில், தினமும் பல கோடி ரூபாய்க்கு வரவு, செலவு நடக்கும். இந்த வங்கியில் 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் வங்கிக்கு மூன்று கார்களில் சேலம், மதுரையை சேர்ந்த வருமான வரித்துறை நுண்ணறிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 10 பேர் வந்தனர். இவர்கள் வங்கி ஆவணங்களை சோதனையிட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தபோது வங்கியின் தலைவரான அதிமுக நகர செயலாளர் ஆதி.மோகனக்குமார் இருந்தார். அதிகாரிகள் வந்த அரைமணி நேரம் கழித்து அவர் வங்கியிலிருந்து வெளியேறினார். ஆதி.மோகனக்குமார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

பின்னர் வருமானவரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘காலை 11மணி முதல் அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் செலுத்திய வட்டி குறித்து எந்த தகவலும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து தகவல் அளித்தும் பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து வருமானவரித்துறை சட்டம் 133/ஏ படி நேரடியாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வங்கியில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்துபவர்கள் மற்றும் அவர்களின் வட்டி தொகைகள் உள்ளிட்ட எந்த தகவலையும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கவில்லை. யாரெல்லாம் பான் எண் தராமல் அதிக பணம் பரிமாற்றம் செய்தனர் என்ற தகவலும் திரட்டப்பட்டு வருகிறது. வருமான வரித்துறைக்கு வழங்கப்படாத வேறு தகவல்கள் இருக்கிறதா என்று தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆலங்குளம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் பொறுப்பில் இருந்தவர்கள் பினாமி பெயர்களிலும், இறந்தவர்கள் பெயர்களிலும், நிலங்கள் இல்லாமலும் மோசடியாக ஆவணங்கள் தயார் செய்து ரூ.2.11 கோடிக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவரும், ஆலங்குளம் நகர அதிமுக செயலாளருமான கே.பி.சுப்பிரமணியன், முன்னாள் செயலாளர் சொரிமுத்து உட்பட ஏராளமானோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து 60பேர் மீது வழக்கு பதிவு செய்து முன்னாள் செயலாளர் சொரிமுத்து, கடன் பெற்ற முருகன் ஆகியோரை கைது செய்தனர். நகர அதிமுக செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட 58 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் மோசடி வழக்கில் தலைமறைவானவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதியிலும், கேரள மாநிலம் வர்க்கலையிலும் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தலைமறைவானவர்களை போலீசார் தேடி வரும் சூழ்நிலையிலும் அதிமுக நகர செயலாளர் கே.பி.சுப்பிரமணியன் கூட்டுறவு வங்கிக்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது.

The post வட்டி வசூலிப்பில் முறைகேடு புகார் அறந்தாங்கி கூட்டுறவு வங்கியில் ஐடி ரெய்டு: சோதனை நடந்தபோது எஸ்கேப்பான விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளர் appeared first on Dinakaran.

Tags : Aranthangi Co-operative Bank ,Vijayabaskar ,Pudukottai ,Aranthangi City Cooperative Bank ,Aranthangi Co ,Bank ,Dinakaran ,
× RELATED காவிரி நீரை களவாடுகிறார் விஜயபாஸ்கர்...