×

வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்த வாலிபருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: மன்னிப்பு கோரியதால் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களை தாக்குவது போன்றும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இது, தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுபோன்று சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் தவறான வீடியோவை பதிவிட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபம் சுக்லா மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுபம் சுக்லா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எவ்வித ஆதாரமும் இன்றி தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது தவறு என்றும், இனிவரும் காலங்களில் உண்மை தன்மை ஆராயாமல் சமூக வலைத்தளத்தில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவலை பகிர மாட்டேன் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சுபம் சுக்லாவிற்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சுபம் சுக்லா இரண்டு வாரங்கள் தினமும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

The post வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்த வாலிபருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: மன்னிப்பு கோரியதால் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,northern states ,
× RELATED வேலை தேடி தமிழ்நாட்டுக்கு...