×

வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

பெரம்பூர்: வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். வியாசர்பாடியில் உள்ள மரகதாம்பாள் உடனுறை ரவீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ திருவிழா, கடந்த 14ம் தேதி கிராம தேவதை பாலாத்தம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட ரவீஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் உற்சவர் சிலைகள் தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் திருத்தேர் வீதி உலா தொடங்கியது.

பின்னர், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வியாசர்பாடி 2வது பள்ளத் தெரு வழியாக மேகிசின் புரம், வியாசர்பாடி மார்க்கெட், பாலகிருஷ்ணன் தெரு வழியாக வந்த தேர், மாலை 3 மணியளவில் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. வழியெங்கும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். பொதுமக்கள் அன்னதானம் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். இந்த தேரோட்டத்தில் பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், மாமன்ற உறுப்பினர்கள் டில்லிபாபு, ஷர்மிளா காந்தி, ஆனந்தி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாநிதி, அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் பாஸ்கரன், கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர், எழுத்தர் நந்தகுமார், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் வியாசை மணி, செந்தில் முருகன் மற்றும் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் பெரம்பூர் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* மருத்துவ முகாம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் தமிழ்வாணன், செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், குணசேகர், வர்கீஸ், வானமாமலை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகராட்சி சார்பிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

The post வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Therotam Kolagalam ,Vyasarpadi Raeeswarar ,Temple ,Perambur ,Vyasarpadi Raveeswarar Temple ,Chariot Kolakalam ,
× RELATED விண்ணை முட்டிய ஓம் நமச்சிவாய கோஷம்...