×

சவுகார்பேட்டை பகுதியில் வைர வியாபாரி கடையில் ஐடி அதிகாரிகள் சோதனை: பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது

சென்னை: சவுகார்பேட்டை பகுதியில் வைர வியாபாரிக்கு சொந்தமான கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரியவந்துள்ளது. சென்னை சவுகார்பேட்டை பகுதியில் தங்கம், வைரம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்யும் மார்க்கெட் உள்ளது. இது மும்பைக்கு அடுத்தபடியாக பெரிய மார்க்கெட். இங்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தங்கம், வெள்ளி, வைரம் வாங்க வியாபாரிகள் வந்து செல்வார்கள். எனவே இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் உள்ள நகைக் கடை உரிமையாளர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அப்பகுதியில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது பிஷ்ரால் சீதாராம் என்ற ஒரு வைர வியாபாரி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. சவுகார்பேட்டை துளசிங்கம் தெருவில், மாஞ்சிலால் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ராதாமோகன் புருஷோத்தம் தாஸ் என்ற பெயரில் இவர் தங்க நகை வியாபாரம் மற்றும் பைனான்ஸ் செய்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக கீழ்ப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சவுகார்பேட்டை பகுதியில் இவருக்கு சொந்தமாக 24 கடைகள் உள்ளன. இவருக்கு 2 மகன்கள். இருவரும் ஷேர் மார்க்கெட் தொடர்பான தொழில் செய்து வருகிறார்கள். தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பிஷ்ரால் சீதாராமுக்கு சொந்தமான கடைகளில் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சவுகார்பேட்டை பகுதியில் வைர வியாபாரி கடையில் ஐடி அதிகாரிகள் சோதனை: பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Saukarpet ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...