×

அமைதி திரும்ப வேண்டும்

நமது உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் சின்ன காயம் ஏற்பட்டாலும், அது உடல் முழுக்க தீராத பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதே போன்று தான் வடகிழக்கு மாநிலமாக இருந்தாலும் மணிப்பூரில் வன்முறை, கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மே 3ம் தேதி ெதாடங்கிய குக்கி இன மக்களின் போராட்டம் தீவிரமடைந்து கொண்டே போகிறது. பெரும்பான்மையினராக உள்ள மைத்தேயி சமூகத்தினரை பழங்குடியின வகுப்பில் சேர்க்கும் அரசின் போக்கை கண்டித்து அவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதுவரை 120 பேருக்கு மேல் உயிரிழந்துவிட்டனர். ஒன்றியத்திலும், மணிப்பூரிலும் பாஜ ஆட்சி இருந்தும் டபுள் இன்ஜின் அரசின் எந்தவொரு நடவடிக்கையும் அம்மாநிலத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்தவில்லை. நிலைமை கைமீறி சென்றுவிட்டது என்று தற்போது தான் ஒன்றிய அரசு உணர்ந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள், உடமைகள் அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

உரிமைக்காக போராடுகின்றவர்களை விட உரிமை பறிபோனதால் எழுந்துள்ள போராட்டத்துக்கு எப்போதும் வீரியம் அதிகம். ராணுவத்தினர், அதிரடிப்படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த பாஜ அரசால் முடியவில்லை. இந்நிலையில் தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூர் மாநில நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மணிப்பூர் வன்முறையால் தங்கள் வீடு, உடைமைகளை அப்படியே விட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். மணிப்பூரில் நடந்து வரும் தொடர் வன்முறையால் பாஜ ஆட்சியை கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மணிப்பூர் கலவரம் மனதை நொறுக்குகிறது. சகோதரத்துவ உணர்வை வளர்க்க அளப்பரிய நம்பிக்கையை உருவாக்க வேண்டியுள்ளது. ஆனால் வெறுப்பையும், பிரிவினையையும் தூண்டிவிட ஒரு தவறான செயல் போதும்.

மணிப்பூரில் ஒருவருக்கொருவர் நல்லிணக்கமாக வாழ்ந்த மக்கள் இன்று எதிர் எதிராக நின்று மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் என்னும் அழகிய மண்ணில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வாருங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டுள்ளார். மணிப்பூருக்கு இதுவரை ஒன்றிய அமைச்சர்கள் யாரும் சென்று பார்வையிடவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. தகவல் பரிமாற்றம் நடக்காமல் இருக்க இணையதள வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. சிரியா, லிபியா போன்று மணிப்பூர் மாநிலம் மாறுவதற்கு முன்பு மக்களை காப்பாற்றுங்கள் என்று ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் கதறல் நெஞ்சை உருக்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களுக்கு வழங்கிய உரிமைகளை பறிக்க நினைப்பதும், ஒடுக்க நினைப்பதும் பெரிய மக்கள் புரட்சியாக மாறிவிடும் என்பதற்கு மணிப்பூர் உதாரணமாகிவிட்டது. எனவே, ஒன்றிய அரசு முழு கவனம் செலுத்தி அம்மாநிலத்தில் அமைதியை திரும்ப கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

The post அமைதி திரும்ப வேண்டும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…