×

மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த வியூகம் 20 கட்சி தலைவர்கள் பாட்னாவில் இன்று ஆலோசனை: முதல்வர் மு.க.ஸ்டாலின், கார்கே, ராகுல், மம்தா, கெஜ்ரிவால் பங்கேற்பு

பாட்னா: நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை எதிர்ப்பதற்காக ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் பீகாரில் இன்று நடைபெறுகின்றது. இதில், 20 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிரான எதிர்கட்சி தலைவர்களின் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டிவந்தார். இந்நிலையில் பாஜவுக்கு எதிரான மெகா கூட்டணியின் முதல் கட்ட நடவடிக்கையாக இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் முக்கிய எதிர்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உட்பட 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஒரே எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவதற்கான ஒரு தொடக்கப்புள்ளியாக இந்த ஆலோசனை கூட்டம் கருதப்படுகின்றது. எதிர்கட்சி தலைவர்களின் இந்த முதல் கூட்டத்தில் தொகுதி பங்கீடு, தலைமை பொறுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பாஜவை வீழ்த்த வியூகம் வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

* மாயாவதிக்கு அழைப்பு இல்லை

எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து மாயாவதி , இதயங்களுக்கு மாறாக கைகள் ஒன்றிணைக்கின்றன என்று விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளித்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் கேசி தியாகி கூறுகையில்,‘‘2024ம்ஆண்டு தேர்தலில் பாஜவுக்கு எதிராக போராடுவதற்கு விரும்பும் கட்சிகளுக்கு தான் அழைப்பு விடுக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கூட்டணியில் பங்கேற்க மாட்டோம் என்று கூறியது. பிறகு எதற்கு அழைப்பிதழை வீணடிக்க வேண்டும்” என்றார்.

The post மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த வியூகம் 20 கட்சி தலைவர்கள் பாட்னாவில் இன்று ஆலோசனை: முதல்வர் மு.க.ஸ்டாலின், கார்கே, ராகுல், மம்தா, கெஜ்ரிவால் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Lok Sabha elections ,Patna ,Chief Minister ,M.K.Stalin ,Kharge ,Rahul ,Mamata ,Kejriwal ,Bihar ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...