×

பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மனு வாங்கும் நிகழ்ச்சியில் ரூ.1.77 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பொதுமக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளிடம் மனு வாங்கும் நிகழ்ச்சியில், ரூ.1.77 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை வாரியாக பிரித்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் நேற்று மனுக்கள் பெறப்படுகின்றது. இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகிறது. மேலும், நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில், பெறப்பட்ட 258 மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு சரி செய்ய வேண்டும். மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும். சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது. அதனை சரி செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் நேற்று பெறப்பட்டுள்ளன. நமக்கு தெரியாத சில பிரச்னைகள் மற்றும் மக்களின் தேவைகளை இன்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது.

அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு, முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 3 விவாசயி பயனாளிகளுக்கு இடு பொருட்களும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், சிறுகாவேரிப்பாக்கம் களஞ்சிய ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, வேளாண் தொழில் தொடங்க சமநிலை மானியத்திற்கான ரூ.3 லட்சத்திற்கான காசோலையும், கூட்டுறவுத்துறை சார்பில், 1 விவசாயி பயனாளிக்கு மத்திய கால வேளாண் கடனும் மற்றும் மதிப்பிலான 6 மகளிர் குழுக்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழு கடன்களும், மாவட்ட தொழில் மையம் சார்பில், 4 பயனாளிகளுக்கு பல்வேறு தொழில் தொடங்குவதற்கு மதிப்பிலான வங்கி மானியத்தொகைக்கான ஆணைகளும், தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார பணி சார்பில், மதிப்பிலான வங்கி கடன் தொகையும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து, குன்றத்தூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் மேல்மா நகர் மற்றும் பிள்ளையார் கோயில் தெரு அருகில் ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார்கள் அமைத்து தருவதற்கான ஒதுக்கீடு செய்த ஆணைகளை ஊராட்சி மன்ற தலைவரிடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சியில் குடிநீர் வசதி மேற்கொள்ள ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்த ஆணைகளை ஒன்றியக்குழு உறுப்பினரிடம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

இதில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி. செல்வம், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் தேவேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர் கருணாநிதி உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மனு வாங்கும் நிகழ்ச்சியில் ரூ.1.77 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,T.R. Moe Andarasan ,Kanchipuram ,Public and Local Council ,Public ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...