×

அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது

வேடசந்தூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அய்யலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை ரூ.2 கோடிக்கு மேல் தாண்டியது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஆடு மற்றும் கோழிச்சந்தை நடைபெறும். இந்த சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக வாங்குதவற்கு இந்த சந்தைக்கு அதிகளவில் வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த வாரம் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் நாளில் குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் அதிகளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம். இதையொட்டி இன்று அய்யலூரில் கூடிய ஆட்டுச்சந்தை களை கட்டியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். குறிப்பாக வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகளே அதிகளவில் விற்பனையானது.

நன்கு வளர்ந்த கிடா ஆடுகள் ரூ.40 ஆயிரம் வரை விலை போனது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.6 ஆயிரத்து 500க்கும், செம்மறி ஆடு ரூ. 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன. விவசாயிகள் சிலர் தாங்கள் கொண்டு வந்திருந்த செம்மறி ஆடுகளுக்கு அலங்காரம் செய்திருந்தனர். விற்பனை குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘இன்று ஆடுகள் விற்பனை நன்றாக இருந்தது. சந்தை துவங்கிய மூன்று மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன’’ என்றனர்.

The post அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது appeared first on Dinakaran.

Tags : Ayyalur market ,Bakrit festival ,Vedasandur ,Ayyalur ,
× RELATED அய்யலூரில் சாலையில் கிடக்கும்...