×

உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டி: நேபாள அணிக்கு 340 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி

ஹராரே: உலகக் கோப்பை தகுதி சுற்றின் 9வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – நேபாள அணிகள் விளையாடி வருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 339 ரன்களை குவித்துள்ளது. நிகோலஸ் பூரன் – ஷாய் ஹோப் ஆகியோர் சதம் விளாசினர். 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணிகள் விளையாடி வருகிறது.

உலகக் கோப்பை தகுதி சுற்றுப்போட்டிகள் ஜிம்பாப்வே வில் நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நேபாளம், இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் இரண்டு சுற்றுகளாக விளையாடுகிறது.

இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி, நேபாள அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங் மற்றும் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

மேயர்ஸ் 1 ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து சார்லஸ் களமிறங்கினார். 6 பந்துகளை எதிர்கொண்ட சார்லஸ் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டாகி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் பவர்பிளே முடிவில் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப், பிராண்டன் கிங் உடன் கைகோர்த்து அணிக்கு ஹோப் கொடுத்தார். 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராண்டன் கிங் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி கொண்டிருந்தது.

இதையடுத்து நிகோலஸ் பூரன் – ஷாய் ஹோப் ஆகியோர் ஜோடி சேர்ந்து நேபாள அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்க்க தொடங்கினர். அதிரடியாக விளையாடி வந்த இந்த ஜோடி 216 ரங்களி சேர்த்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தது.

நிகோலஸ் பூரன் 94 பந்துகளில் 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திபேந்திரா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரோவ்மேன் பவல் 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி வந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் 129 பந்துகளில் 132 ரன்களை குவித்து ராஜ்பன்ஷி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை குவித்தது.

நேபாள அணி தரப்பில் அதிகட்சமாக ராஜ்பன்ஷி 3 விக்கெட்டுகளையும், கரண், குல்சன், லமிச்சானே, திபேந்திரா சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நேபாள அணி 15 ஓவர்கள் முடிவில் 59 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர், ஜோசப், கீமோ பால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

The post உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டி: நேபாள அணிக்கு 340 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி appeared first on Dinakaran.

Tags : World Cup Qualifier ,West Indies ,Nepal ,Harare ,World Cup ,World Cup Qualifiers ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு