×

இன்ஸ்டாகிராம் காதல் கல்யாணம் வீதிக்கு வந்தது: கணவன் வீட்டு முன்பு சென்னை பெண் தர்ணா

ஆத்தூர்: ஆத்தூரில் காதல் கணவன் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார். அதே சமயம், மகனை மிரட்டி போலீசார் திருமணம் செய்து வைத்ததாக கூறி, காதலன் குடும்பத்தினர், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் தீபிகா(21). பொறியியல் பட்டதாரியான இவருக்கு, கடந்த 2020ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில், ஆத்தூர் சக்தி நகரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு விக்னேஷின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, தீபிகா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவரது குடும்பமும் சென்னை தரமணிக்கு சென்றது. காதலன் தன்னை திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாக கூறி, கடந்த 2022 ஏப்ரல் 18ம் தேதி, தீபிகா ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்திய போது, தீபிகாவை திருமணம் செய்து கொள்வதாக, விக்னேஷ் எழுதிக் கொடுத்து விட்டு சென்றார். பின்னர் அவர் தலைமறைவானார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் விக்னேஷ் கோவையில் எம்பிஏ படித்து வருவது தீபிகாவுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அவர் புகார் அளித்தார். அதன் பேரில் விக்னேஷை வரவழைத்த போலீசார், ஆத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஏப்ரல் 20ம் தேதி, ஆத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, தீபிகாவுக்கு விக்னேஷ் தாலி கட்டினார். இதன் பின்னர், விக்னேஷ் தனது குடும்பத்தாருக்கு தெரியாமல், சென்னை தரமணியில் உள்ள தீபிகாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். திருமணம் முடிந்து 2 மாதங்கள் ஆன நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், சொந்த ஊரான ஆத்தூருக்கு வந்து விட்டார்.

இதுகுறித்து தீபிகா மற்றும் குடும்பத்தினர், தரமணி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அப்போது, விசாரணைக்கு ஆஜரான விக்னேஷ், போலீசாரின் வற்புறுத்தலால்தான் தீபிகாவுக்கு தாலி கட்டியதாகவும், அது செல்லாது என நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடி தீர்வு தேடிக்கொள்ளும்படி எழுதி வாங்கிக்கொண்டு, போலீசார் அனுப்பி விட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆத்தூர் வந்த தீபிகா, சக்தி நகரில் உள்ள தனது கணவன் விக்னேஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்த விக்னேஷின் அக்கா சங்கீதாவை, தீபிகா மற்றும் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சங்கீதா, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதையடுத்து, தீபிகா கணவன் வீட்டின் முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே, விக்னேஷின் தந்தை ரவி மற்றும் குடும்பத்தினர், ஆத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் தமிழரசி மிரட்டி செய்து வைத்த திருமணம் செல்லாது என கூறி, போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இன்ஸ்டாகிராம் காதல் கல்யாணம் வீதிக்கு வந்தது: கணவன் வீட்டு முன்பு சென்னை பெண் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Instagram ,Kallyana ,Dharna ,Aathur ,Chennai Girl ,Tarna ,
× RELATED ஸ்ருதிஹாசனை பிரிந்தது ஏன்? சாந்தனு ஹசாரிகா பேட்டி