×

வீடு தேடி வரும் அம்மாக்களின் உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

கேரளா, தென்னிந்தியா, ஆந்திரா, மெக்சிகன், அரேபியன், மெடிடேரியன், ஸ்பானிஷ் என பல வகை உணவகங்கள் வரிசை கட்டிக் கொண்டு இயங்கி வருகிறது. மக்களும் பல வித உணவுகளை சுவைக்க விரும்புகிறார்கள். ஓட்டல் உணவுகளுக்கான மோகம் இருந்தாலும், பாட்டி மற்றும் அம்மாக்களின் கைப்பக்குவத்தில் தயாராகும் வீட்டு உணவுகளுக்கு என தனி கிரேஸ் இருக்கு. சுடச்சுட மிளகு ரசம், அம்மியில் அரைத்த பருப்பு துவையலுக்கு நாம் அனைவரும் அடிமை என்றுதான் சொல்லணும்.

அப்படிப்பட்ட வீட்டு உணவுகளை சுவை மற்றும் தரம் மாறாமல் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறார் பிரபா சந்தானகிருஷ்ணன். ஓசூரைச் சேர்ந்த இவர் அமைத்திருக்கும் ‘குக்கர்’ என்ற செயலிதான் அம்மா கைப்பக்குவத்தில் வீட்டுக் கிச்சனில் தயாராகும் உணவுகளை வழங்கி வருகிறது. இதன் செயல்பாடு மற்றும் ஹோம் செஃப்களை ஒன்றிணைத்தது பற்றி விவரிக்கிறார் பிரபா.

‘‘அமெரிக்காவில் இயங்கி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 28 வருஷமா வேலை பார்த்தேன். கோவிட் தாக்கப்பட்ட சமயம். நான் இந்தியாவிற்கு வந்திருந்தேன். அப்போது எனக்கு பெரிய அளவில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றேன். மருத்துவமனையில் நான் இருந்த சமயம் யாரும் என்னை பார்க்க அனுமதிக்க மாட்டாங்க. உணவும் சரியாக இருக்காது. எனக்கோ வீட்டுச் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று ஆசை.

என் சகோதரி டெலிவரி ஆப் மூலம் உணவினை எனக்கு மருத்துவமனைக்கு அளித்து வந்தாள். ஆனால் வெளியூரில் இருந்து இங்கு வேலை பார்க்கும் பலருக்கு இந்த நேரத்தில் வீட்டு உணவு கிடைப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் அந்த சமயத்தில் உணர்ந்தேன். அது குறித்து என் நண்பர்களுடன் பேசிய போதுதான் புரிந்தது இந்தியாவில் தரமான மற்றும் சுவையான வீட்டுச் சாப்பாட்டிற்கு தனிப்பட்ட மார்க்கெட் இருப்பதை அறிந்தேன்.

அதற்கான சந்தையை நாம் ஏன் அமைக்கக்கூடாதுன்னு எனக்குள் ஒரு சிந்தனை ஏற்பட்டது. குறிப்பாக வீட்டுச் சாப்பாட்டிற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களை டார்கெட் செய்ய முடிவு செய்தேன். காரணம், அந்த லிஸ்டில் நானும் ஒருவன் என்பதால் அந்த தவிப்பினை உணர முடியும்’’ என்றவர் குக்கர் செயலி பற்றி விவரித்தார்.

‘‘இன்றைய காலக்கட்டத்தில் ஓட்டல் உணவுகளைதான் விரும்புறாங்க. சென்னையில் மட்டுமில்லை அனைத்து நகரத்திலும் வார இறுதி நாட்கள் உணவகங்கள் நிரம்பி வழிகிறது. சாப்பிட சுவையாக இருக்கும். ஆனால் தொடர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு கியாரன்டி கிடைக்குமா? விடை உடல் பருமனில் ஆரம்பித்து படிப்படியாக ஒவ்வெரு பிரச்னைகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். பெண்களும் வேலைக்கு செல்வதால், சமைக்க நேரம் இருப்பதில்லை. அந்த சமயத்தில் அவர்கள் நம்பி இருப்பது ஓட்டல் உணவுகளை மட்டுமே.

அதையே வீட்டில் சமைக்கும் உணவுகளை கொடுத்தால், மக்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் மாற்றத்தினை கொண்டு வர முடியும்னு நினைச்சேன். அந்த உணவுகளை தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி மக்களுக்கு கொடுக்க திட்டமிட்டேன். பெண்களில் 80% வேலைக்கு சென்றாலும் 20% இல்லத்தரசிகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதற்கான வாய்ப்பினை தொழில் நுட்பம் மூலம் ஏற்படுத்தி தர நினைத்தேன். அப்படித்தான் குக்கர் செயலி உருவானது. இதனை என் நண்பர்களான நிர்மல்குமார் மற்றும் சரவணகுமாருடன் இணைந்து துவங்கினேன்.

வீட்டுச் சமையல் அறையில் சமைக்கப்படும் உணவுகள் மட்டுமே கொடுக்க திட்டமிட்டோம். முதலில் ஓசூரில்தான் இதனை துவங்கினோம். முதலில் அந்த பகுதியில் வீட்டு உணவிற்கு இருக்கும் டிமாண்ட் குறித்து ஆய்வு செய்தோம். அடுத்து சமூக வலைத்தளத்தில் வீட்டில் இருந்தபடியே சமைத்து தருபவர்களின் தகவல்களை சேகரித்தது மட்டுமில்லாமல், அது குறித்து விளம்பரமும் அளித்தோம். பலர் முன்வந்தார்கள். அவர்களுக்கு எங்களின் செயல்திட்டங்களை விவரித்தோம்.

விருப்பம் இருந்தவர்கள் இணைந்தார்கள். செயலியை பொறுத்தவரை இதுவும் உணவினை டெலிவரி செய்யும் ஆப்தான். ஆனால் இதில் சப்ளை செய்யப்படும் உணவுகள் அனைத்தும் வீட்டில் தயாரிக்கப்படுபவை. எங்களை பொறுத்தவரை வீட்டுச் சமையல் அறையில் இருந்துதான் உணவு வரவேண்டும். உணவகமோ, சின்ன தள்ளுவண்டி கடைக்கு கூட இங்கு இடமில்லை. இந்த கான்ெசப்ட் புதுசல்ல.

பேச்சிலர்களாக இருப்பவர்கள், தங்களுக்கு சமைக்க மட்டும் தனிப்பட்ட நபர்களை நியமித்து இருப்பார்கள். அவர்கள் அந்த ஒரு வீட்டுக்கு மட்டும் தான் சமைப்பார்கள். இது காலம் காலமாக நடைபெற்றுதான் வருகிறது. இவர்கள் பெரும்பாலும் ஒரு இரண்டு தெருவில் உள்ள வீடுகளை மட்டும்தான் டார்கெட் செய்வார்கள். காரணம், டெலிவரி செய்ய முடியாது. உணவிற்கான விலையினை நிர்ணயிக்க தெரியாது. எங்களை பொறுத்தவரை அவர்கள் சமைத்துக் கொடுத்தால் மட்டும் போதும், அதற்கான பேக்கிங், டெலிவரி என அனைத்தையும் நாங்க பார்த்துக் கொள்ேவாம்.

முதலில் ஹோம் செஃப்களை அடையாளம் கண்டு ஒரு வாட்ஸப் குரூப்பினை அமைத்தோம். அதில் அவர்கள் எந்த உணவினை சிறப்பாக சமைப்பார்கள் என்பதைக் கேட்டறிந்தோம். ஒருவர் பிரியாணி என்றால் ஒருவர் கேரளா, ஆந்திரா, தென்னிந்திய உணவுகள் என்றார்கள். இவர்கள் சமைக்கக்கூடிய உணவுகளை கொண்டு மெனு அமைத்து, செயலியில் பதிவிட்டோம். ஒருவரால் பத்து பேருக்கு பிரியாணி சமைக்க முடியும் என்றால், பிரியாணி ஸ்டாக் இருக்கும் வரை அந்த உணவின் பெயர் செயலியில் இடம் பெற்று இருக்கும். தீர்ந்து விட்டால் அந்த பெயரினை நீக்கிடுவோம். எல்லாவற்றையும் விட இவர்கள் தினமும் சமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

காரணம், இவர்களுக்கு குடும்பம் மற்றும் அவர்களுக்கான தனிப்பட்ட நேரமுண்டு. அதற்கு ஏற்ப அவர்கள் உணவினை வழங்கினால் போதும். உதாரணத்திற்கு, ஒருவர் தங்களின் குழந்தைகளின் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால், மதிய உணவு கொடுக்க முடியாது என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் போதும். நாங்க மற்ற ஹோம் செஃப்களை கொண்டு அன்றைய மெனுவினை மாற்றி அளிப்போம்.

மேலும் ஒருவர் ஒரே உணவினை தான் கொடுக்க வேண்டும் என்றில்லை. அதாவது ஒருவர் பொங்கல் கொடுத்து வருகிறார் என்றால் அதையே கொடுக்காமல் சப்பாத்தி சப்ஜி என மாற்றிக் கொடுக்கலாம். ஒவ்வொரு செஃப்களும் அந்த வாரம் என்ன உணவினை கொடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப மெனுவினை மாற்றி அமைக்க ஒரு தனிப்பட்ட குழு அமைத்திருக்கிறோம். எல்லாவற்றையும் விட ஒவ்வொரு செஃப்களின் பெயரில் தான் அவர்கள் சமைக்கப்படும் உணவுகள் குறிப்பிட்டு இருக்கும்.

அதாவது லலிதா என்பவர் சமைத்துக் கொடுக்கிறார் என்றால், லலிதா கிச்சனில் என்ன உணவுகள் உள்ளன என்பதை பட்டியலிட்டு இருப்போம். அதைப் பார்த்து வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யலாம்’’ என்றவர் ஓசூரைத் தொடர்ந்து திருச்சி, சிதம்பரம், கோவை, மதுரை, சென்னை, கும்பகோணம், தஞ்சை, சேலம், புதுச்சேரி போன்ற இடங்களில் துவங்கியுள்ளார்.

‘‘தற்போது தமிழ்நாட்டில் ஓரளவு இடங்களில் நாங்க செயல்பட்டு வருகிறோம். இதனைத் தொடர்ந்து பெங்களூர், ஐதராபாத்திலும் துவங்க இருக்கிறோம். ஒவ்வொரு நகரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட செஃப்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதில் பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்கள், திருநங்கை ஒருவரும் உள்ளனர். சைவம், அசைவம் இரண்டுமே கொடுக்கிறோம். ஒரு சிலர் சுத்த சைவமாக இருப்பார்கள். அவர்கள் செயலியில் பதிவு செய்யும் போது, சைவம் மட்டும் என்று குறிப்பிட்டால், அசைவ உணவுகள் அவர்களின் செயலியில் இடம்பெறாது. மேலும் சைவ கிச்சனில் சமைக்கப்படும் உணவுகள் மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப வடிவமைத்திருக்கிறோம். அதே சமயம் அவ்வப்போது மெனுவிலும் மாற்றங்களை அளித்து வருவதால், வாடிக்கையாளர்களுக்கு ஒரே உணவினை சாப்பிட்ட உணர்வு இருக்காது. எதிர்காலத்தில் பான் இந்தியா முழுக்க உள்ள ஹோம் செஃப்களை இணைத்து அனைவருக்கும் வீட்டு உணவினை கொடுக்க வேண்டும். மேலும் இவர்கள் அனைவரும் குறுதொழில்முனைவோர்கள் என்றாலும், அவர்களுக்கு எங்களால் ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி தர முடிந்திருப்பதை நினைக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.

ஆரம்பிக்கும் போது இவ்வளவு பெண்கள் இதில் இணைவார்கள் என்று நினைக்கவில்லை. இதை பெரிய அளவில் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம். உணவு மட்டுமில்லாமல், மசாலாக்கள் மற்றும் பொடி வகைகளையும் அறிமுகம் செய்திருக்கிறோம். 75 வயது மிக்க கோவையை ேசர்ந்த பெண்மணி ஒருவர் கைமுறுக்கு செய்து தருகிறார். அவரை போல் தின்பண்டங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க இருக்கிறோம். ஒரு சிலர் இட்லி மாவு, கத்தரிக்கப்பட்ட காய்கறிகள், இன்ஸ்டன்ட் சப்பாத்தி, கொத்தமல்லி சட்னி கேட்கிறார்கள்.

இதுபோல் டிமான்ட் இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தும் கொடுக்க இருக்கிறோம். உணவுத்துறையில் மட்டும் தான் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து தர முடியும். அதனால் அவர்களின் தேவை அறிந்து எங்களின் சேவை இருக்கும்’’ என்றார் பிரபா சந்தானகிருஷ்ணன்.

தொகுப்பு: ஷம்ரிதி

The post வீடு தேடி வரும் அம்மாக்களின் உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : Kerala ,South India ,Andhra ,Mediterranean ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...