×

சென்னை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 லட்சம் செலவில் புதிய கணினி ஆய்வகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 லட்சம் செலவில் புதிய கணினி ஆய்வகத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 142 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தினை (HI- TECH COMPUTER LAB ) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் திறம்பட செயல்பட கல்வித்தரம் மட்டுமல்லாது கட்டமைப்பையும் மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி பள்ளியில் மாணவர்களை சேர்க்க தயக்கம் காட்டிய பெற்றோர்கள் மத்தியில் தற்பொழுது, மாநகராட்சி பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு போட்டி நிலவும் அளவிற்கு மேம்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்வி திறனை மேலும் மேம்படுத்தும் வகையில் மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 லட்சம் செலவில் சிறந்த கணினி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி இருக்கும் இடத்தை உயர் நீதிமன்றம் கட்டுவதற்காக கேட்டு இருந்தார்கள். அதற்காக மாணவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டு அங்கு தங்க வைத்திருக்கிறார்கள். மாணவர்களை கலந்தாலோசித்த பிறகு புதிதாக கட்டி வருகிறோம். மேலும் ஒரு வருடத்திற்குள் புதிய விடுதி மாணவர்களுக்காக திறந்து வைக்கப்படும்.

மேலும், உயர்நீதிமன்றத்தின் கட்டமைப்பையும் மேம்படுத்துவது மற்றும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை எனவே கலந்தாலோசித்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்றுதான் அறுவை சிகிச்சை என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நலமாக இருக்கிறார் அவர் நேற்று மாலையே சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவப் பிரிவில் (post operation ward ) மாற்றப்பட்டார். அவர் எத்தனை நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதெல்லாம் மருத்துவர்கள் தான் கூற வேண்டும். அனைத்து துறையிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நடத்த முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.

அதன் படி மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 24 ஆம் தேதி 100 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது அதில் குறிப்பாக சென்னையில் 10 இடங்களில் நடைநடைபெற உள்ளது. நீட் பயிற்சியில் பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சென்னை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 லட்சம் செலவில் புதிய கணினி ஆய்வகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mantopu Girls High School ,Chennai ,Minister ,Ma. Subramanian ,Saitappettai ,Hon. ,Subramanian ,
× RELATED வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31...