×

மீஞ்சூர் அரியன்வாயல் அரசு பள்ளியில் நம் குப்பை நம் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொன்னேரி: திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மை நகருக்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பொதுமக்கள் பங்கேற்று சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நம்ம ஊரு சூப்பரு, நம் குப்பை நம் பொறுப்பு, நம் நகரம் நம் பெருமை என பரவலாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், பேரூராட்சிகளில் நம் குப்பை நம் பொறுப்பு என்ற தலைப்பின்கீழ் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சி இணை இயக்குநர் மாஹின் அபுபக்கர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி மீஞ்சூர் பேரூராட்சி 2வது வார்டு அரியன்வாயல் அரசு நடுநிலைப்பள்ளியில் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு, பேரூராட்சி தலைவர் ருக்மணி, துணை தலைவர் அலெக்சாண்டர் வழிகாட்டுதலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வார்டு உறுப்பினர் அபுபக்கர் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலைமதி முன்னிலை வகித்தார். பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களிடம் வீட்டையும் பள்ளிக்கூடத்தையும் சுற்றுப்புரத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக தரம் பிரித்து தூய்மைபணியாளர்களிடம் வழங்க பெற்றோரை வலியுறுத்தவேண்டும். பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்தவேண்டும். பேரூராட்சியை குப்பையில்லா பகுதியாக மாற்றுவதற்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதில், வார்டு சபை உறுப்பினர்கள் செய்யது அலி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சிஹாபுத்தின், கந்தசாமி, காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகிகள் சாகுல் அப்துல்ரஹ்மான், அசாரூத்தின் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.

The post மீஞ்சூர் அரியன்வாயல் அரசு பள்ளியில் நம் குப்பை நம் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Arianvayal Government School ,Meenjur ,Ponneri ,Tiruvallur ,Collector ,Alby John Varghese ,
× RELATED மீஞ்சூரில் வாலிபர் கொலையான...