×

ஸ்டேண்ட் – பீ!

இந்த வார்த்தையை கேள்விப்பட்டதுண்டா? பெண்களுக்காக இருக்கும் பல விஷயங்களை நாம் காது கொடுத்துக் கூட கேட்பதில்லை. பேச வேண்டிய, சொல்ல வேண்டிய சில விஷயங்களைக் கூட பரிமாரிக் கொள்வதில்லை. அதில் ஒன்று இந்த இயற்கை உபாதைப் பிரச்னை. ‘ப்ச்… பசங்களா பிறந்திருக்கலாம், சுதந்திரமா சிறுநீர் கூட போக முடியலைப்பா’ என பெண்கள் பலரும் அலுத்துக்கொள்வதைப் பார்த்திருப்போம். ஆனால் அதற்கும் வழி உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

‘நீண்ட நேரம் இயற்கை உபாதைகளை அடக்குவதால் குறிப்பாக சிறுநீரை அடக்கும் போது ஏராளமான பிரச்னைகள் வந்து சேரும். சிறுநீரகக் கல் துவங்கி, பெருங்குடல் தொற்று வரை உண்டாகலாம். எப்படி தேவையான அளவு தண்ணீர் அருந்துவது முக்கியமோ அதைக் காட்டிலும் முக்கியம் இயற்கை உபாதைகளை கடுப்படுத்தாமல் வெளியேற்றுவது. அதிலும் பெண்களுக்குத்தான் இதில் சிக்கல் அதிகம். எங்கும் எதிலும் கழிவறையைத் தேடிக் கொண்டிருப்பதே பெரிய வேலையாக இருக்கும். அதைக் காட்டிலும் பெரிய பிரச்னை சுகாதாரம். கழிவறை கிடைத்துவிட்டது ஆனால் எட்டிக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்தால் எப்படிப் பயன்படுத்துவது. இதற்குதான் உதவுகிறது ஸ்டேண்ட் – பீ (Stand – Pee).

யூஸ் – த்ரோ, மற்றும் மறுபயன்பாடு, என இரண்டு விதங்களில் கிடைக்கும் இந்த ஸ்டேண்ட் – பீ உங்கள் பகுதியின் பெரிய மருந்துக் கடைகளில் கிடைக்கும். கிராமப்பகுதிகள், புறநகர் பகுதிகள், ஏன் நகரங்களின் சின்ன தெருக்களில் இருக்கும் மருந்தகங்களில் கிடைப்பதே சற்று அரிதுதான். காரணம் இதன் பயன்பாடு இன்னும் பிரபலமாகவில்லை. பல பெண்களுக்கும் இதுகுறித்து தெரியவும் இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணம். ரூ.90 முதல் துவங்கி ஒரு பேக்கிங்கில் 40 அட்டைகள் முறையே யூஸ் – த்ரோ கார்டுகளாக முறையே ரூ.600 வரை கூட இந்த ஸ்டேண்ட் – பீ விற்பனைக்கு உள்ளன. மறுபயன்பாடு ஸ்டேண்ட் – பீ’கள் உங்களுக்கு விருப்பமெனில் பீரியட் கப் போல் கழுவி விட்டு பயன்படுத்தலாம். குறிப்பாக இரயிலில் பயணிக்கும் போது இந்த ஸ்டேண்ட் – பீ அதிகம் பயன்படும். சில பெண்களுக்கு பொதுக் கழிப்பிடம் பயன்படுத்தினாலே அரிப்பு, அந்தரங்க உறுப்புக்குள் தொற்று உள்ளிட்டவை உண்டாகலாம். ஸ்டேண்ட் – பீ பயன்படுத்தும் போது குறிப்பாக வெஸ்டர்ன் ஸ்டைல் கழிவறைகளில் தொடவோ, உட்காரவோ தேவை இருக்காது. ஆனால் பயன்படுத்திவிட்டு கழிவறை பேசினின் சுவர்களை நிச்சயம் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். ஏனேனில் மற்றவர்களின் சுகாதாரமும் முக்கியமல்லவா?!.

பயன்படுத்தும் முறை
நிரந்தர ஸ்டேண்ட் – பீ

பீரியட் கப் போல் சிலிக்கான், மற்றும் பிளாஸ்டிக் என கிடைக்கும். இதனை பயன்படுத்திவிட்டு நன்றாக கழுவி பேக் செய்து வைத்துக்கொள்ளலாம்.

யூஸ் – த்ரோ ஸ்டேண்ட் – பீ

ஒரு பாக்கெட்டில் குறைந்தபட்சமாக 5 முதல் அதிக பட்சமாக 40 வரை கூட உள்ள ஸ்டேண்ட் – பீகள் உள்ளன. பார்ப்பதற்கு சிறிய பேப்பர் ராக்கெட் வடிவத்தில் அட்டையில் செய்யப்பட்ட கார்டுகள் போல் இருக்கும். விரித்தால் வடிகட்டி அல்லது புனல் போல் இருக்கும். இதனை சரியாக சிறுநீர் கழிக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால் அப்பட்டமாக ஆண்கள் நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பது போல் பெண்களும் கழிக்கலாம். பயன்படுத்திவிட்டு அப்படியே அந்தக் கார்டை குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாம். இவற்றில் நிறைய பிராண்டுகள் உள்ளன. மேலும் அந்தரங்க சோப், வாஷ் விற்பனை செய்யும் பிராண்டுகள், சில சானிட்டரி பேட் நிறுவனங்களும் கூட இந்த ஸ்டேண்ட் – பீ கருவியை விற்பனை செய்கின்றன. உங்களுக்கு எந்த பிராண்ட் மேல் நம்பிக்கை உள்ளதோ அதனை வாங்கிக் கொள்ளலாம். ஸ்டேண்ட் – பீ’தானே என பொது இடங்களில் சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும். மேலும் பொதுக்கழிப்பிடங்களிலும் நமக்கு பாதுகாப்புக் கருவி இருக்கிறது என்பதற்காக கண்டபடி பயன்படுத்திவிட்டு கழிவறையை சுத்தம் செய்யாமலும் வெளியேறுவதைத் தவிர்க்கவும். போலவே இப்போதைக்கு அவசரம் எனில் சிறுநீர் கழிப்பது மட்டுமே என்பதால் இது அதற்கு மட்டுமே பயன்படும் என்பதையும் மனதில் கொள்ளவும்.

– ஷாலினி நியூட்டன்

The post ஸ்டேண்ட் – பீ! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்