×

மேட்டுப்பாளையம் அருகே பெருமாள் கோயில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த பாகுபலி யானை- வீடியோ வைரல்: மூர்க்கத்தனமாக மாறும் முன் வனத்திற்குள் விரட்ட கோரிக்கை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே அதிகாலை நேரத்தில் ஊருக்குள் புகுந்த பாகுபலி என்ற காட்டு யானை பெருமாள் கோயிலின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தது. மூர்க்கத்தனமாக மாறி வரும் இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது இரை, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டி உள்ள ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தாசம்பாளையம், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் காட்டு யானையின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த யானை அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறி சமயபுரம் பகுதியில் சாலையை கடந்து அருகிலுள்ள தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நுழைந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. பகல் முழுவதும் விளைநிலங்களில் சுற்றி தனது பசியினை தீர்த்துக்கொள்ளும் பாகுபலி யானை மீண்டும் மாலை நேரத்தில் சமயபுரம் வழியாக மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. நீண்ட தந்தங்களுடனும், பிரம்மிப்பூட்டும் அதன் பிரம்மாண்ட உருவமும் கொண்ட பாகுபலி யானையைக் கண்டு சமயபுரம், தாசம்பாளையம், குரும்பனூர், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இதுவரை இந்த பாகுபலி யானை மனிதர்கள் யாரையும் தாக்கவோ, துரத்தவோ, விரட்டவோ இல்லை. சமீப காலமாக இது மூர்க்கத்தனத்துடன் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் தாசம்பாளையம் பகுதியில் ஊருக்குள் உலா வந்த பாகுபலி யானை அங்குள்ள பெருமாள் கோயில் மண்டபத்தின் முன்பக்க கேட்டை உடைத்து கோயிலுக்குள் சென்றது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, பலமுறை பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனத்துறை இக்கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. மருதமலை அடிவாரத்தில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்த நிலையில், இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

The post மேட்டுப்பாளையம் அருகே பெருமாள் கோயில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த பாகுபலி யானை- வீடியோ வைரல்: மூர்க்கத்தனமாக மாறும் முன் வனத்திற்குள் விரட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Elephant ,Perumal Temple Gate ,Madupalayam ,Bhugubali ,Perumal ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்