×

யானை தாக்கி ஒருவர் பலியானதால் மருதமலை, அனுவாவி கோயிலுக்கு பக்தர்கள் படிக்கட்டில் செல்ல தடை: வனத்துறை நடவடிக்கை

கோவை: கோவை மருதமலை கோயில் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், கோயிலுக்கு படிக்கட்டு வழியாக பக்தர்கள் மாலை 5 மணிக்கு மேல் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை, பாரதியார் பல்கலைக்கழகம், ஐஒபி காலனி சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை நடமாட்டம் இருந்து வருகிறது. சமீபகாலமாக யானை அடிக்கடி மருதமலை கோயில் படிக்கட்டை கடந்து வனத்திற்குள் செல்லும் நிகழ்வுகள் நடந்துள்ளது. யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் மருதமலை கோயில் அருகே சுற்றி வரும் நிலையில், நேற்று முன்தினம் மருதமலை ஐஓபி காலனி பகுதியை சேர்ந்த குமார்(30) என்பவர் தனது, மனைவி கல்பனா மற்றும் 3 வயது மகன் அனீஷ்குமாருடன் விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்றார். விறகு சேகரித்து அவர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒற்றை ஆண் யானை, குமாரை தூரத்தியது. அப்போது, அவர் தனது கையில் இருந்த 3 வயது மகனை அருகே பாதுகாப்பான இடத்தில் தூக்கி வீசினார். மனைவி தப்பி ஓடி விட்டார். குமார் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால், யானை அவரை பின்தொடர்ந்து தாக்கியது. அவரின் இடது காலினை பிய்த்து வீசியது. மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை, குமாரை மிதித்து உள்ளது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரின் 3 வயது மகன் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் மருதமலை சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இது போன்ற யானை- மனித மோதல் சம்பவங்கள் மருதமலை அருகே நடந்தது இல்லை என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தவிர, குமாரை மிதித்து கொன்ற காட்டு யானை மருதமலை வனப்பகுதியிலேயே சுற்றி கொண்டிருக்கிறது. இந்த யானை தான் மருதமலை கோயில் படிக்கட்டை அடிக்கடி கடந்து வனத்திற்குள் செல்கிறது. இதனால், மருதமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதே போல், ஆனைகட்டி ரோடு சின்ன தடகாம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியிலும் யானை நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால், அனுவாவி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும் வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: கோவை மருதமலை கோயில் சுற்றுவட்டார பகுதியில் யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் படிக்கட்டு வழியாக பக்தர்கள் கோயிலுக்கு நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர்.

காலை 7 மணிக்கு முன்பு மற்றும் மாலை 5 மணிக்கு பின் பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. அடிவாரத்தில் இருந்து பேருந்து மூலம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. யானை நடமாட்டம் தொடர்பாக கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், இரவு முதல் மறுநாள் வரை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவர். தவிர, மருதமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஊர்களில் வாகனம் மூலம் யானை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதே போல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் படிக்கட்டு வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டி இருக்கிறது. அந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கிறது. எனவே, அனுவாவி கோயிலுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.
இவ்வாறு வனத்துறையினர் கூறினர்.

The post யானை தாக்கி ஒருவர் பலியானதால் மருதமலை, அனுவாவி கோயிலுக்கு பக்தர்கள் படிக்கட்டில் செல்ல தடை: வனத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Marutamalai, Anuvavi Temple ,Govai ,Govai Marudamalai temple ,Marudamalai, Anuvavi Temple ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை