×

2 வாலிபர்களிடம் ₹15.57 லட்சம் மோசடி

சேலம், ஜூன் 22: சேலம் மெய்யனூர் அர்த்தனாரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவரது செல்போனுக்கு பகுதி நேரம் வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்த மகேந்திரன் அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை கிளிக் செய்து தகவல்களை பார்த்தார். பின்னர் அதில் கொடுத்திருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர், சிலவற்றிற்கு பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அதன்படி அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக 2லட்சத்து 58ஆயிரத்து 900ரூபாயை மகேந்திரன் அனுப்பி வைத்தார். அதன்பின்னர் பகுதி நேர வேலை எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி மகேந்திரன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.இதேபோல் சேலம் சிவதாபுரம் திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்(38). இவரது செல்போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர்கள் பணம் செலுத்தும்படி தெரிவித்துள்ளானர். அதன்படி அவர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்கிற்கு 12லட்சத்து 99ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்தார். அதன்பின்னர் அந்த செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த இரண்டு புகார்கள் பற்றியும் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 வாலிபர்களிடம் ₹15.57 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Salem ,Mahendran ,Meiyanur Arthanari Street, Salem ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...