×

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

வடலூர், ஜூன் 22: வடலூர் அருகே வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் மற்றும் கருங்குழியில் அவர் தண்ணீரால் விளக்கேற்றிய இல்லம், வள்ளலார் சித்தி அடைந்த மேட்டுக்குப்பத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம் செய்தார். பின்னர் வடலூர் சத்திய ஞானசபைக்கு வரும் நேரத்தில் முன்பாக சபை பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர்.
அப்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கவர்னர் செயல்படுவதாகவும், தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அவரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்ப முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

பின்னர் வடலூர் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோதும் போலீசார் தடுத்து நிறுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு காவல் நிலையம் வரை சென்றனர். பின்னர் போலீசார் 13 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். மேலும் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வடலூர் சத்திய ஞானசபையில் தரிசனம் செய்துவிட்டு வரும் வரை வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் வடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்: நேற்று மாலை கடலூர் அண்ணா பாலம் அருகே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த ஏராளமானோர் கருப்பு கொடியுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பாலம் சிக்னல் அருகே கருப்பு கொடியுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் திலகர், மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மதிமுக மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஜெ. ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் குளோப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஷேக் தாவூத், செயலாளர் ரஹீம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாமன்ற உறுப்பினர் அருள்பாபு, மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் பாலு, காங்கிரஸ் வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன், ரவிகுமார், மணிக்கண்டன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரான் உள்பட 75 பேரை கைது செய்தனர்.

The post கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது appeared first on Dinakaran.

Tags : Communist Party ,Vadalur ,Marudhur ,Vallalar ,Karunkhuzi ,
× RELATED நாகை நாடாளுமன்ற தொகுதியில் 4 முறை...