×

மதி வழக்கில் ஆசிரியர்கள் பெயர் நீக்கம் பெற்றோர் ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்கியது நீதிமன்றம்

விழுப்புரம், ஜூன் 22: மதி மரண வழக்கிலிருந்து ஆசிரியர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பெற்றோர் ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் மதி (17). கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இந்த மாணவி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆட்சேபனை இருந்தால் ஜூன் 5ம் தெரிவிக்க நேரில் ஆஜராகும்படி ஸ்ரீமதியின் தாய் செல்விக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தொடர்ந்து குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைக்குமாறு மதி தாய் மனுதாக்கல் செய்தார்.

இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, மதியின் தாய் கேட்ட ஆவணங்கள் அனைத்தும் வழங்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்தது. அதன்படி கடந்த 12ம் தேதி குற்றப்பத்திரிக்கை நகல் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றம் தாய் செல்வியிடம் வழங்கி நேற்றையதினம் ஆஜராகி ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தாய் செல்வி நேரில் ஆஜரானார். அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குற்றப்பத்திரிக்கையை இன்னும் முழுமையாக படிக்கவில்லை மேலும் காலஅவகாசம் அளிக்கவேண்டுமென தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 2 வார காலஅவகாசம் வழங்கி வரும் ஜூலை 5ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post மதி வழக்கில் ஆசிரியர்கள் பெயர் நீக்கம் பெற்றோர் ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்கியது நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madi ,Villupuram ,Mathi ,Dinakaran ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...