×

ரூ.19.37 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இருளர்களுக்கான 443 இலவச வீடுகள் விரைவில் திறப்பு: பழங்குடியின நலத்துறை உயர் அதிகாரிகள் தகவல்

சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.19.37 கோடி மதிப்பீட்டில் இருளர் இன மக்களுக்கான 443 இலவச வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ‘பெரும்பாலான பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்ந்து வருகின்றனர். அதன்படி, வீடற்ற பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 2021-22ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கப்பட்ட 443 இருளர் இன பழங்குடியினர் குடும்பங்களுக்கு ரூ. 4.62லட்சம் மதிப்பீட்டில் ரூ.19.37 கோடியில் 443 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அந்தவகையில் வீடுகள் கட்டுவதற்கான அரசாணை கடந்தாண்டு மார்ச் 16ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் சமதளப்பரப்பில் தனி வீடு, மலைப்பகுதிகளில் தனி வீடு, கடின மண்பகுதியில் தனி வீடு என வகைப்படுத்தி கட்டுவதற்கான தொகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. மேலும், கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீடுகள் கட்டும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து பணிகள் வேகப்படுத்தப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் திறக்கப்படவுள்ளன. அதேபோல, 2022-23ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையின் போது விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் இனமக்களுக்கு 1094 வீடுகள் ரூ.50 கோடியில் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டன. அதன்படி, 12 மாவட்டங்களில் கட்ட திட்டமிட்டப்பட்டு அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமதளப்பரப்பில் ஒரு வீட்டிற்கு ரூ.4,37,430, மலைப்பகுதியில் ஒரு வீட்டிற்கு ரூ.4,95,430 கணக்கீடு செய்யப்பட்டு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதுகுறித்து பழங்குடியின நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் மக்களுக்காக கழிப்பறைவசதியுடன் கூடிய 443 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதனை இம்மாதம் இறுதியில் திறக்க ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், இந்த வீடுகளுக்கு தேவையான மின்சாரம், குடிநீர், சாலை வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல, 12 மாவட்டங்களில் 1094 இருளர் மக்களுக்கான வீடுகள் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.19.37 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இருளர்களுக்கான 443 இலவச வீடுகள் விரைவில் திறப்பு: பழங்குடியின நலத்துறை உயர் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Iluras ,Chennai ,Kanchipuram ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...