அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் ஜன.24ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் குறித்து கோவில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியதாவது: அயோத்தியில் மூன்று மாடிகளைக் கொண்ட ராமர் கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்து விட்டது. மகர சங்கராந்தி அன்று (ஜனவரி 14) ராம் லல்லா கும்பாபிஷேகத்தை தொடங்க கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஜனவரி 14 மற்றும் ஜனவரி 24 க்கு இடையில், ராம் லல்லாவின் புனிதப் பிரதிஷ்டை 10 நாள் சடங்கு நடைபெறும்.
கோயில் கும்பாபிஷேகத்திற்கான சில நல்ல நாட்களை ஜோதிடர்களிடமிருந்து கோவில் அறக்கட்டளை பெற்றுள்ளது. ஜனவரி 21, 22, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளை ஜோதிடர்கள் மங்களகரமான நாட்களாக தெரிவித்துள்ளனர். ராம் லல்லாவின் சிலை ஜனவரி 22 அன்று பிரதிஷ்டை செய்யப்படலாம். இது சிறந்த தேதி என்று கூறப்படுகிறது. எனவே ஜனவரி 24ம் தேதி முதல் பக்தர்களை தரிசிக்க அனுமதி அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
கோவிலின் கருவறையில் ராம் லல்லா சிலை நிறுவப்படும் கும்பாபிஷேக விழாவிற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் பிரதமர் மோடியை அழைப்பார்கள். அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம் பிரதமருக்கு அனுப்பப்படும். சிலை பிரதிஷ்டைக்கான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படாததால் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி 26ம் தேதிக்கு இடையில் சாதகமான தேதி குறித்து பிரதமரிடம் அனுமதி கேட்கப்படும். கருவறையின் பிரதான கதவு மற்றும் 161 அடி உயர சிகரம் ஆகியவை தங்கத்தால் மூடப்பட்டிருக்கும்.
The post அயோத்தி ராமர் கோயில் ஜன. 14ம் தேதி திறப்பு: ஜனவரி 24 முதல் பக்தர்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.
