×

பெயரை போடாமல் இன்சல்ட் செய்ததால் அப்செட் ஆன மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தன்னுடைய இல்ல திருமணம் வரை சேலம்காரருக்கு சவால்விட்ட வைத்தியானவரு, திடீரென ஏன் அமைதியாகிட்டாரு… ’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேலம்காரர், தேனிக்காரர் 2 அணிகளாக பிரிந்து கட்சியை நடத்தி வர்றாங்க. இதுல தேனிக்காரர் யாரை சந்திக்க மாட்டேன்னு சொன்னாரோ, அரசியலுக்காக அவர்களை சந்திக்க தொடங்கி உள்ளாராம். உதாரணமாக சொன்னால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாலிசி தானாம். இப்போது இந்த 2 அணியிலுமே மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருக்காங்க. நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சரான வைத்தியானவர் தற்போது தேனிக்காரர் அணியில் இருக்கார். சில தினங்களுக்கு முன் தேனிக்காரர் தனது நெருங்கிய ஆதரவாளரான வைத்தியானவருடன் சென்று குக்கர் தலைமையை நேரில் சந்தித்து ‘மனம்’ விட்டு பேசினாங்களாம்.

சமீபத்தில் நடந்த வைத்தியானவரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கும்படி சின்ன மம்மி, குக்கர் தலைமையானவருக்கு குடும்பத்தோடு நேரில் சென்று பத்திரிகை வைத்தாராம். இதில் 2 பேரும் பங்கேற்பதாக தெரிவித்தனர். குக்கர் கட்சியின் தலைவரு மட்டும் கல்யாணத்தில் பங்கேற்றாராம். ஆனால், சின்ன மம்மி பங்கேற்கவில்லை. இதனால் வைத்தியானவர் மனவருத்தத்தில் இருக்காராம். சமீபத்தில் நெற்களஞ்சியத்தில் குக்கர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் வைத்தியானவரை பங்கேற்கும்படி அழைப்பு வந்ததால், அவர் தனது ஆதரவாளர்களுடன் போனாராம். சேலம்காரர் விஐபி, அவரது ஆதரவாளரான மனுநீதி சோழன் மாவட்ட மாஜி அமைச்சர் ஆகியோர் பேச்சுக்கு இந்த பொதுக்கூட்டம் மூலம் வைத்தியானவர் சரியான பதிலடி கொடுத்ததாக, அவருடைய அடிப்பொடிகள் பேசிக்கிறாங்க.

தற்போது வைத்தியானவர் சைலண்ட் ஆயிட்டாராம். நெற்களஞ்சியம் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் தனது செல்வாக்கை பெரிய அளவில் நிரூபிக்க இருப்பதை வெளியே தெரியாமல் திரைமறைவில் அதற்கான வேலையில் இறங்கியுள்ளாராம். வெளியில் சைலண்டாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் தனக்கு நம்பிக்கையான ஆட்கள் மூலம் சேலம்காரரை சுளுக்கெடுக்கும் பணியும் மற்றொரு பக்கம் நடக்குதாம். இதனால் அவரை தொடர்ந்து கண்காணித்து வரும் சேலம் டீமுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாம். வைத்தியானவரின் செயல்பாடுகளை கண்காணித்து அவருடைய அடுத்தடுத்த மூவ்ெமன்டுகளை பற்றி ரகசியமாக விசாரித்து தகவல் சொல்லுங்க. ஏன்னா, அடிதடி வெட்டு குத்துனு பேசற நெற்களஞ்சியம்காரர் அமைதியா இருப்பது சந்தேகமா இருக்குனு சொல்லி விவரங்களை சேகரிக்க சொன்னாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சாதாரண பணிக்கு கூட அதிகாரிகள் கரன்சியை கறப்பது எதற்காம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர்பத்தூரில் கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல காலியாக உள்ள சமையலர், சலவை தொழிலாளர் பணிக்கு நியமனம் ெசய்ய நேரடியாக விண்ணப்பம் வாங்கினாங்களாம். இதில் மிஸ்டர்பத்தூர் ஹெட் கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல கம்ப்யூட்டர் ஆபரேட்டராக உள்ள பக்கத்து மாவட்டமான கிரி மாவட்டத்தில கரை முடியும் ஊரை சேர்ந்த மொழியரசி, சலவை தொழிலாளர் பணிக்கு மனு போட்டிருந்தாராம். நேர்காணலின்போது மருத்துவ இணை இயக்குனர் மாரிமழை பெய்து முத்தாக பெயர் கொண்ட வரும், ஹெட் ஹாஸ்பிடல்ல இளநிலை அட்மின் ஆபிசர் ராஜாவும் சேர்ந்து, பல லட்சங்களை வாங்கிக் கொண்டு பணி ஆணை வழங்கிட்டாங்க, மற்ற பணியிடங்களுக்கு ஆட்களை சேர்க்க 2 அதிகாரிங்க பல லட்சம் பார்த்துடுங்களாம்.

இதுல மொழியரசிக்கு ஆம்பூர்ல ஹாஸ்பிடல்ல சலவை தொழிலாளர் பணி ஆணை வழங்கப்பட்டதாம். ஆனா, மொழியரசியோ எனக்கு ரத்தத்தை பார்த்தா தலை சுத்தும், நோயாளிகளின் படுக்கை விரிப்பு, தலையணைகள் உள்ளிட்டவை துவைக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கிறாராம். அதோட அதிகாரிங்க துணையோடு, மொழியரசிக்கு பதிலாக வேற ஆளு, அந்த சலவை பணிக்கு சேர்த்து விட்டு, மொழியரசி மீண்டும் மிஸ்டர்பத்தூர் ஹெட் ஹாஸ்பிடல்ல கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரா சேர்ந்துட்டாராம். வேலை செய்றது ஒப்பந்த பணி, ஆனா சம்பளம் அரசு ஊதியமாம். இந்த விஷயம் தொடர்பா லஞ்ச ஒழிப்பு துறை காக்கிகள் இது உண்மை தானா என்பதை கண்டறிய களத்தில் இறங்கி இருக்காங்களாம். இந்த தகவலால யார் மாட்டப்போறங்க… யார் சிறைக்கு போகப்போறங்க என்ற தகவல் தான் ஹாஸ்பிடல் வட்டாரத்தில் ஓடிட்டு இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை என்றாலே பச்சை தான் நினைவுக்கு வரும்… அப்படிபட்ட பச்சையையே ஒதுக்கி இருக்காங்களாமே அப்படியா…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவிலில் இலை கட்சி ஆர்ப்பாட்டத்தில், கிரீன் பெயரை கொண்ட முன்னாள் அமைச்சர் கடும் அப்செப்ட் ஆயிட்டாராம். மேடையில் வைக்கப்பட்டு இருந்த பேனரில் அவரு பெயர் இல்லை. போட்டோ இருந்தது. மாநில அளவில் கட்சி பொறுப்பு இருக்கு. முன்னாள் அமைச்சர் வேற. அப்படி இருந்தும் தனது பெயரை திட்டமிட்டு புறக்கணிக்கிறாங்க என ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த கட்சிக்காரங்க முன்னாடியே ஆதங்கத்தை கொட்டி தீர்த்துட்டாராம். இது ஒரு தடவை இல்ல.

பலமுறை இப்படி நடக்குது. மாவட்ட செயலாளரு பதவிக்கு முயற்சி செய்து வர்தால இதெல்லாம் நடக்குது என கூறி விட்டு, ஆர்ப்பாட்ட மேடையில் அமராமல், மேடைக்கு பின்னாடி இருந்த ஆவின் பாலகத்துக்கு முன் கிடந்த பெஞ்சில் போய் அமர்ந்துட்டாராம். கட்சிக்காரங்க மேடைக்கு போகலையா அண்ணே என்று கேட்க, நான் சாதாரண தொண்டனாக இங்க வந்து இருக்கேன். மேடையில் எனக்கு ஏது மரியாதை என கூறினாராம். அவரு ஆதரவாளர்கள் இதை சமூக வலைத்தளத்தில பரப்ப, ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விட உட்கட்சி பூசல் விவகாரம் ஹைலைட்டாக போய் விட்டது என்கிறார்கள். தமிழகத்தின் நாலு பக்கமும் இலை கட்சியில இன்னும் பிரச்னைதான் ஓடிட்டு இருக்கு. இது தலைமைக்கு தெரியாமலா இருக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் அப்பாவி தொண்டர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.

The post பெயரை போடாமல் இன்சல்ட் செய்ததால் அப்செட் ஆன மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,Salemkar ,Peter ,
× RELATED சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் எக்ஸ் பதிவு